துபாய்,
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 இடம் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்ற இந்தியர்களான மந்தனா ஒரு இடம் அதிகரித்து 6-வது இடத்தையும், தீப்தி ஷர்மா 8 இடங்கள் உயர்ந்து 24-வது இடத்தையும், பூஜா வஸ்ட்ராகர் 4 இடம் முன்னேறி 49-வது இடத்தையும், ஹர்லீன் தியோல் 46 இடங்கள் அதிகரித்து 81-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டென் முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்து தொடருடன் ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 5-வது இடத்தில் உள்ளார். இதே தொடரில் அசத்திய மற்றொரு இந்திய பவுலர் ரேணுகா சிங் 35 இடங்கள் எகிறி 35-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார்.