உத்தர பிரதேச மாநிலம் தருஹெரா பகுதியில் இருந்து லக்னோ நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலை எண் 730-ல் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, லக்கீம்பூர் கெரி பகுதியில் ஈரா பாலம் அருகே ஈசாநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வந்தபோது, எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பேருந்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இதுபற்றி அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை செய்யும்படியும், நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படியும், காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சைக்கு வேண்டிய முறையான ஏற்பாடுகளை செய்து தரும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.