அமரர் கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவல் பல கதாபாத்திரங்களைக் கொண்ட பிரமாண்ட நாவல். தற்போது அந்த நாவல் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரை காணக் காத்திருக்கிறது. அதையொட்டி பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான ஒரு அறிமுகம்தான் இந்த பகுதி.
பெரிய பழுவேட்டரையர்; சோழ நாட்டு தனாதிகாரி, பழுவூர் சிற்றசர், நந்தினியின் கணவர், சின்னப் பழுவேட்டரையரின் அண்ணன்.
பொன்னியின் செல்வன் கதையில் பெரிய பழுவேட்டரையர் என்று அறியப்படும் கண்டன் அமுதனார் கதையில் மிக முக்கிய கதாபாத்திரமாக வருபவர். இவர் காலம்காலமாக சோழ மன்னர்களுக்கு பணியாற்றி, போரில் சோழ மன்னர்களுக்கு உதவி புரிந்து, சோழ தேசத்தைக் காத்து வரும் பழுவேட்டரையர் பரம்பரையைச் சேர்ந்தவர். சுந்தர சோழர் நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும் சமயத்தில் அவரை தம் தம்பி சின்ன பழுவேட்டரையரான காலாந்த கண்டர் தலைமையில் அரண்மனைக் காவலில் வைக்கிறார்.
இருபத்து நான்கு போர்க்களங்களில் கலந்துக்கொண்டு அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராக அறியப்படுகிறார். வீரத்தில் ஆதித்த கரிகாலனுக்கு நிகராகக் கருதப்படும் இவர், பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் மகள் என்று தெரியாமல் நந்தினியை தனது முதிர்ந்த வயதில் திருமணம் செய்துக்கொண்டு, அவளது சூழ்ச்சியை அறியாமல், நந்தினியை அதிகாரப்பூர்வமாக பழுவூர் இளையராணி ஆக்கினார். சோழ நாட்டு நிதித் துறை மொத்தமும் இவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. சுந்தர சோழருக்குப் பின் யார் அரசனாவது என்ற குழப்பம் சூழ்ந்த நிலையில், மதுராந்தகனை மறைமுகமாக அழைத்துச் சென்று சிற்றசர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினார். அப்போது சம்புவரையர் மாளிகையில் இவர் தீட்டிய ரகசிய திட்டத்தினை வந்தியத்தேவன் அழிந்துக் கொள்கிறான். அதன்பின் என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்குகிறது பொன்னியின் செல்வன்.
இறுதியில் நந்தினியின் சூழ்ச்சியை அறிகிறார். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையர்களை சோழ குலத்திற்கு எதிராகச் சித்தரித்தாலும், அடிப்படையில் சோழ அரச குலம் திளைக்கப் பல தியாகங்களைச் செய்தவர்கள் இந்தப் பழுவேட்டரையர்கள்.
திருப்புறம்பியம் போர் களத்தில் போர் புரியும் போது விஜயாலய சோழன் தம் இரு கால்களையும் இழந்துவிட்ட நிலையில், ஒரு பழுவேட்டரையர் தான் அவரை தோளில் சுமந்து சென்று, அப்போரில் சோழர்களின் வெற்றிக்கு காரணமாய் அமைந்தார். மேலும் ஆதித்த சோழனின் தலையில் கிரீடம் வைத்து பட்டாபிஷேகம் செய்ததும் ஒரு பழுவேட்டரையர் தான். அதே ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து அப்பாரஜித்தனை கொல்லும்போது, அவனுக்கு வசதியாக தோள் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையரே. பராந்தக சோழன் நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியினை ஏந்தி சென்றவர்கள் பழுவேட்டரையர்களே. இராஜாதித்யன் போரில் மாய்ந்து விழும் போது அவனை மடியில் தயங்கியவர்கள் பழுவேட்டரையர்கள் தான். இப்போது நாம் பார்த்த பெரிய பழுவேட்டரையரும் சின்ன பழுவேட்டரையரும் அரிஞ்சய சோழருக்கும், சுந்தர சோழருக்கும் பல வீரத் தொண்டுகள் புரிந்து உதவியிருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் நடிகர் சரத்குமார் பழுவேட்டரையராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் சரத்குமார் கச்சிதமா பொருந்தியிருக்கிறாரா என்பதைக் கமென்ட்டில் கூறவும்.
பொன்னியின் செல்வனை ஆடியோ வடிவில் கேட்க
4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த விகடன், இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் மீண்டும் நம் வாசகர்களை வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404