விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மூன்று பேரும் மூன்று குதிரைகளில் ஒன்றிணைந்து வரும் `பொன்னியின் செல்வன்’ ஸ்டில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “கதையில் மூன்று பேரும் ஒன்றாக இருப்பது போல எங்குமே இல்லையே! இது எந்தக் காட்சி?” என்பதுதான் பொன்னியின் செல்வன் வாசகர்கள் எழுப்பும் கேள்வி.
ஆம். புது வெள்ளம், சுழற்காற்று, கொலை வாள், மணிமகுடம், தியாக சிகரம் என்று பெயரிடப்பட்டுள்ள பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களிலும் ஆதித்த கரிகாலர், அருள்மொழி வர்மர், வந்தியத்தேவன் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக சந்தித்துக்கொள்வதாக கல்கி எழுதவே இல்லை.
பொன்னியின் செல்வன் கதை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆதித்த கரிகாலர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். இரட்டை மண்டல நாட்டின் அரசன் கன்னர தேவனை போர் செய்து வென்றுவிட்டு, தன் தந்தைக்காக காஞ்சிபுரத்தில் ஒரு பொன் மாளிகை கட்டிக்கொண்டு இருக்கிறார். (பிற்காலத்தில் ஆதித்த கரிகாலர் மற்றும் அருள்மொழி வர்மரின் தந்தையான சுந்தர சோழர் இங்கு வந்து தங்குகிறார். இங்கேயே மரணமடையும் அவர், அதனால் ‘பொன் மாளிகை துஞ்சிய தேவர்’ என்று பெயர் பெறுகிறார்.) தன் தந்தை சுந்தர சோழருக்கும், தங்கை குந்தவைக்கும் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து ஆதித்த கரிகாலர் அனுப்பும் இடத்தில் பொன்னியின் செல்வன் ஆரம்பிக்கிறது. சுமார் ஓராண்டு கால சம்பவங்களைக் கதை வர்ணித்து, மதுராந்த உத்தம சோழரின் பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஆதித்த கரிகாலர் காஞ்சியிலிருந்து தஞ்சைக்கு வரவே இல்லை. நந்தினியை சந்திக்க அஞ்சி, அவர் காஞ்சிபுரத்திலேயே இருப்பதாக கல்கி எழுதுகிறார். நந்தினியின் ஓலை கிடைத்தபிறகு கடம்பூர் மாளிகை வரும் அவர், அங்கே கொல்லப்படுகிறார். கதை நிகழும் காலத்தில் ஆதித்த கரிகாலர் அருள்மொழி வர்மனை சந்திக்கவே இல்லை. அது மட்டுமில்லை, தன் தந்தை சுந்தர சோழர், தங்கை குந்தவை ஆகியோரையும் சந்திப்பதாகக் காட்சிகள் இல்லை. இறந்தபிறகு அவர் உடலை எடுத்துவந்தபோதுதான் தந்தையும் தங்கையும் தம்பியும் பார்க்கிறார்கள்.
கதையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக ஆதித்த கரிகாலர் தனக்கு இளவரசர் பட்டம் சூட்டிய சம்பவங்களை விவரிப்பார். அதில்தான் சகோதர உறவுகள் மூவரும் இணைந்திருப்பார்கள். அப்போது அவர்களுடன் வந்தியத் தேவன் கிடையாது.
இதேபோல இன்னொரு சுவாரசியமும் உண்டு. கதைப்படி அருள்மொழி வர்மரும் நந்தினியும் ஒரு இடத்தில்கூட சந்தித்துக்கொள்ள மாட்டார்கள். பொன்னியின் செல்வன் கதை நிகழும் காலத்தில் அருள்மொழி வர்மர் இலங்கையில் இருக்கிறார்.
தன் அக்கா குந்தவையின் அழைப்பை ஏற்றும், தந்தை சுந்தர சோழரின் கட்டளையை மதித்தும் அவர் தஞ்சை திரும்புகிறார். கடல் பயணத்தின்போது சூறைக்காற்றில் சிக்கி கடலில் மூழ்கிய வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கி அவர் ஆபத்தில் சிக்குகிறார். அவரையும் வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி படகில் அழைத்துவரும்போது, அருள்மொழி வர்மருக்குக் குளிர்க்காய்ச்சல் ஏற்படுகிறது.
கோடியக்கரைக்கு அவரை அழைத்து வரும் நேரத்தில் நந்தினி அங்குதான் இருக்கிறாள். தன் கணவர் பெரிய பழுவேட்டரையருடன் வரும் அவள், அங்கே முகாமிட்டுத் தங்குகிறாள். அருள்மொழி வர்மரை ரகசியமாக நாகப்பட்டினம் கூட்டிச் செல்வதற்கு முடிவெடுக்கிறான் வந்தியத்தேவன். ஒரு கால்வாய் வழியாக படகில் அவரை பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கூட்டிப் போகிறார்கள். அந்த நேரத்தில் நந்தினி கோடியக்கரையில் இருந்தாலும், இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை.
சில நாட்கள் கழித்து நாகப்பட்டினத்திலிருந்து தஞ்சைக்கு அருள்மொழி வர்மர் சென்றபோது, நந்தினி கடம்பூர் மாளிகையில் இருக்கிறாள். அதன்பின் ஆதித்த கரிகாலர் கொலை நிகழ்ந்து, நந்தினி தப்பிச் சென்றுவிடுவாள். அதனால் அவளும் அருள்மொழி வர்மரும் சந்திக்க மாட்டார்கள். சொல்லப் போனால், நந்தினியும் குந்தவையும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் கூட குறைவுதான். பொன்னியின் செல்வனில் கதை நெடுக உலா வரும் இரண்டு பேர், வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியான் நம்பியும்தான். அவர்கள் பெரும்பாலும் எல்லாக் கதை மாந்தர்களையும் சந்தித்துவிடுகிறார்கள்.