பொன்னியின் செல்வன்: நாவலில் போர்களே இல்லை?! ஆனால் அந்த 4 போர்கள்…

சரித்திரத் திரைப்படங்கள் என்றால் கத்திகள் உரசும், குதிரைகள் பாயும், யானைகள் பிளிறும், போர்க்களத்தில் ஆக்ரோஷமாக படைகள் மோதிக்கொள்ளும். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இப்படிப்பட்ட காட்சிகள் வருகின்றன. ஆனால், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதைக்களத்தில் போர்களே நிகழ்வதில்லை.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் வடதிசை மாதண்ட நாயகராக அறிமுகம் செய்யப்படுகிறார் ஆதித்த கரிகாலர். நாட்டின் வடக்கில் நிலைகொண்டிருக்கும் படைகளுக்கு அவர் படைத்தளபதி. பட்டத்து இளவரசான அவர், பொன்னியின் செல்வன் கதை நிகழும் காலத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். இரட்டை மண்டலத்துப் படைகளுடன் போரை முடித்துவிட்டு, காஞ்சிபுரம் நகரை புனர்நிர்மாணம் செய்து கொண்டிருக்கிறார். படைகளும் ஓய்வில் இருக்கின்றன.

ஆதித்த கரிகாலரின் தம்பியான அருள்மொழி வர்மர் தென்திசைப் படைகளுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார். அவர் இலங்கையில் இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் கதை நிகழும் காலத்தில் அங்கும் போர் நடக்கவில்லை. ஈழப் போரில் தோற்றுவிட்ட சிங்கள மன்னன் மஹிந்தன் காட்டில் தலைமறைவாக இருக்கிறான். அப்போது மழைக்காலம் என்பதால், இலங்கையில் குளிர்க்காய்ச்சல் வேகமாகப் பரவும். மலேரியா நோயையே குளிர்க்காய்ச்சல் என்று கல்கி சொல்கிறார். இலங்கையில் மலேரியா அச்சம் சமீபகாலம் வரை நிலவிய ஒரு விஷயம்தான். இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்ற சமீப காலம் வரைகூட, மழை நாட்களில் போர்கள் நடக்காது. மலேரியாவுக்கு பயந்து சிங்களப் படைகளும் புலிப்படையினரும் காட்டிலிருந்து விலகிவிடுவார்கள்.

பொன்னியின் செல்வனில் குளிர்க்காய்ச்சலையும் ஒரு கேரக்டர் போல அறிமுகம் செய்யும் கல்கி, அதைத் தவிர்ப்பதற்காக படைகள் அமைதியாக முகாம் இட்டிருப்பதாகச் சொல்கிறார். நான்கு மாதங்கள் தொடரும் மழைக்காலத்தில் போர் நடக்காது என்கிறார்.

கல்கி – பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்

மோதல் என்று பார்த்தால், கல்கி இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். அருள்மொழி வர்மரின் தமக்கை குந்தவை கொடுத்த ஓலையுடன் இலங்கை செல்லும் வந்தியத்தேவன், முதல்முதலாக அவரை சந்திக்க நேரும் காட்சியில் மோதல் வருகிறது. சோழ வீரன் ஒருவனின் குதிரையைக் கவர்ந்துகொண்டு செல்லும் வந்தியத்தேவனை அருள்மொழி வர்மர் அந்தக் குதிரையிலிருந்து தள்ளிவிடுகிறார். அருள்மொழி வர்மர் யார் என்று தெரியாமலே அவருடன் மோதுகிறான் வந்தியத்தேவன். இருவரும் மல்யுத்தம் செய்கிறார்கள். கடைசியில் அவர் யார் என்று அறிந்து திகைக்கிறான் வந்தியத்தேவன்.

மறுநாள் அனுராதபுரம் வீதியில் இருவரும் குதிரைகளில் வருகிறார்கள். அப்போது சோழர் படைகள் அவர்களைத் தேடி வருகின்றன. வருவது எந்தப் படை என்று தெரியாமல், அதைக் கண்டறிய இளவரசர் அருள்மொழி வர்மர் ஒரு தந்திரம் செய்கிறார். திடீரென கோபமாகி, ”உன் அதிகப்பிரசங்கித்தனத்தை இனிமேலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று வந்தியத்தேவனுடன் சண்டைக்குப் போகிறார். இருவரும் குதிரையிலிருந்து இறங்கி பிரமாண்ட கத்திகளைக் கைகளில் பிடித்துக்கொண்டு வாள்சண்டை போடுகிறார்கள்.

ஜெயம் ரவி – அருள்மெமொழி வர்மராக|கார்த்தி – வந்தியத் தேவனாக

அவர்களை நெருங்கும் சோழர் படையினர் அந்த சண்டையைத் தடுக்க முனைகிறார்கள். இலங்கையில் முகாமிட்டிருக்கும் சோழர் படைக்குத் தளபதியாக இருப்பவர், கொடும்பாளூர் சிற்றரசரான பூதி விக்கிரம கேசரி. அவர் மற்றவர்களைத் தடுத்து, ”என்ன அற்புதமான கத்திப் போர். இந்த மாதிரி பார்த்து எத்தனையோ நாள் ஆயிற்று!” என்று சண்டையை ரசிக்கிறார். சமபலம் கொண்ட இரண்டு வீரர்களின் மோதலாக அந்தக் கத்திச்சண்டை இருக்கிறது. அங்கு வந்த பூங்குழலியைப் பார்த்து திகைத்து வந்தியத்தேவன் கவனம் சிதற, அவன் வாளை அருள்மொழி வர்மர் தட்டிவிட்டதும் சண்டை முடிவுக்கு வரும்.

மற்றபடி படையெடுப்பு என்பதாகவும் இரண்டு சம்பவங்கள் வரும். கடம்பூர் மாளிகையில் தங்கியிருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து, அவரின் அம்மாவழித் தாத்தாவான திருக்கோவலூர் மலையமான் தன் படைகளுடன் கடம்பூரை முற்றுகை இடுவார். அந்த முற்றுகை நடக்கும் நேரத்தில் ஆதித்த கரிகாலனின் மரணமும் நிகழ்ந்துவிடும். கடம்பூர் மாளிகையும் தீப்பற்றி எரியும். அந்த அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்திருக்க, ஆதித்த கரிகாலனின் சடலத்துடன் படைகள் தஞ்சாவூர் செல்வதாக சம்பவங்கள் காட்டப்படும். அதனால் அங்கு மோதல் எதுவும் நடக்காது.

வந்தியத் தேவனாக கார்த்தி

இதேபோல இன்னொரு சம்பவம்… இளைய இளவரசர் அருள்மொழி வர்மர் தஞ்சை திரும்பியதும் அவரை பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்த இருப்பதாக வதந்தி பரவும். அதனால் கொடும்பாளூர் படைகள் தஞ்சையை முற்றுகையிடும். தஞ்சைக் கோட்டைக்குக் காவல் இருக்கும் பழுவேட்டரையர் படைகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனாலும் இரு படைகளுக்கும் மோதல் எதுவும் நிகழாது.

பொன்னியின் செல்வனில் ஃபிளாஷ்பேக் சம்பவங்களாக நான்கு போர்க்களக் காட்சிகள் விவரிக்கப்படும். அவை நான்குமே சோழ சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தை நிர்ணயித்த போர்கள். அதன்மூலம் தமிழகத்தின் வரலாற்றை திசை திருப்பியவை.

திருப்புறம்பியம் போர்:

முதல் போர், பல்லவப் படைகளுக்கும் பாண்டியப் படைகளுக்கும் நடைபெற்ற திருப்புறம்பியம் போர். இப்போது கும்பகோணத்துக்கு அருகே ஒரு கிராமமாக இருக்கும் இங்கு நடைபெற்ற போரில், பல்லவர் படைகளுக்கு உதவியாக கங்க மன்னன் பிரிதிவீபதியும், சோழ மன்னர் ஆதித்த சோழனும் இருந்தனர். பாண்டியர்களுக்கு சிங்களப் படைகள் உதவிக்கு வந்திருந்தன. அப்போது பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக சோழர்கள் இருந்தனர். போரில் பாண்டியர் கைகள் ஓங்கிய தருணத்தில் ஆதித்த சோழனின் தந்தை விஜயாலயர் களத்துக்கு வருகிறார்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம் – வந்தியத் தேவனாக கார்த்தி

உடலில் 96 விழுப்புண்கள் தாங்கிய முதுபெரும் வீரரான அவர் நிகழ்த்திய சாகசத்தில் பாண்டியர் படைகள் தோற்று ஓடுகின்றன. அந்தப் போரின் விளைவாக சோழர்களுக்குக் கூடுதல் செல்வாக்கு கிடைக்கிறது. பல்லவர்களின் வலிமை குன்ற, பிற்கால சோழ மரபு உதயமாகிறது. அடுத்தடுத்து வந்த பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திர சோழன் காலங்களில் சோழப்பேரரசு மகோன்னதம் பெறுகிறது.

அந்தப் போரில் உயிர் துறக்கிறார், கங்க மன்னர் பிரிதிவீபதி. அவர் நினைவாக திருப்புறம்பியத்தில் பள்ளிப்படைக் கோயில் ஒன்று கட்டப்படுகிறது. அந்தப் பள்ளிப்படைக் கோயிலில்தான் பிற்காலத்தில் பாண்டிய மன்னரின் ஆபத்துதவிகள் சதித்திட்டம் தீட்டுவதாக கல்கி சித்திரித்து இருப்பார்.

தக்கோலம் போர்:

இரண்டாவது போர், தக்கோலம் போர். சோழர்களில் பேரரசர்களாக விளங்கிய பராந்தக சோழன் காலத்தில் இந்தப் போர் நடைபெற்றது. பராந்தகருக்கு மூன்று மகன்கள். ராஜாதித்தன், கண்டராதித்தன் மற்றும் அரிஞ்சயன். மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான ராஜாதித்தன் இந்தப் போருக்குத் தலைமை ஏற்றார். இவர்தான் தன் படைகளுடன் தொண்டை நாட்டில் முகாமிட்டிருந்தபோது வீராணம் ஏரியை உருவாக்கியவர். தற்போதைய அரக்கோணத்துக்கு அருகில் ஒரு கிராமமாகக் காட்சி தரும் தக்கோலத்தில் இந்தப் போர் நடைபெற்றது. ராஷ்டிரக்கூடப் படைகளுக்கும் சோழர் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில், யானை மீது இருந்து போரிட்ட ராஜாதித்தன் ஒரு வேல் தாக்குதலில் போர்க்களத்தில் மரணமடைந்தார். ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ என்ற பெயரும் பெற்றார். ராஜாதித்தர் மரணமடைந்ததும் சோழர் படைகள் பின்வாங்கின. இந்தப் போரில் ராஷ்டிரக்கூடர்கள் தோற்றதாக சோழர் கல்வெட்டுகளும், சோழர்கள் தோற்றுப் பின்வாங்கியதாக ராஷ்டிரக்கூடக் கல்வெட்டுகளும் சொல்கின்றன. இந்தப் போருக்குப் பிறகு காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை மண்டலப்பகுதிகள் ராஷ்டிரக்கூடர்கள் கட்டுப்பாட்டில் வந்தன. பிற்காலத்தில் ஆதித்த கரிகாலனே இந்தப் பகுதிகளை மீட்கிறான்.

ஆதித்த கரிகாலன்- விக்ரம், நந்தினி- ஐஸ்வர்யா ராய்.

ராஜாதித்தன் மரணமடைந்ததால், அவர் தம்பி கண்டராதித்தனும், அதன்பின் கண்டராதித்தன் தம்பி அரிஞ்சயனும் ஆட்சிக்கு வருகிறார்கள். அரிஞ்சயனுக்குப் பிறகு அவர் மகன் சுந்தர சோழர் மன்னர் ஆகிறார். அதனால்தான் சுந்தர சோழரின் வாரிசான ராஜராஜனுக்குப் பிற்காலத்தில் அரியணை வசமாகிறது. ஒருவேளை தக்கோலம் போரில் ராஜாதித்தன் உயிர் துறக்காமல் இருந்திருந்தால் ராஜராஜன், ராஜேந்திரம் போன்றவர்கள் சோழ மன்னர்கள் ஆகாமல், மன்னர் பரம்பரையில் ஒருவராக சாதாரணமாக வாழ்ந்து முடிந்திருக்கக்கூடும்.

ஃபிளாஷ்பேக்கில் வரும் இரு போர்கள்:

பொன்னியின் செல்வன் ஃபிளாஷ்பேக்கில் வரும் இன்னும் இரு போர்கள், பாண்டியர்களுடனானது. பாண்டிய மன்னன் வீரபாண்டியன் படைகளுடன் சோழர்கள் மோதுகின்றனர். முதல் போரில் 13 வயது சிறுவனாக ஆதித்த கரிகாலர் பங்கேற்கிறார். வீரபாண்டியன் படைகள் பின்வாங்க, ஒரு மலைக்குகையில் சென்று பதுங்கி விடுகிறார் வீரபாண்டியன். மூன்று ஆண்டுகள் கழித்து வீரபாண்டியன் படை திரட்டி வர, இலங்கைப் படைகள் அவன் உதவிக்கு வர, சேவூர் என்ற இடத்தில் மீண்டும் நடக்கிறது போர். இதில் தோற்ற வீரபாண்டியனின் தலையை வெட்டி, தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டு வருகிறார் ஆதித்த கரிகாலர். ‘வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டம் அவருக்குக் கிடைக்கிறது. இந்த அவமானத்துக்குப் பழிவாங்கவே, பாண்டிய மன்னரின் ஆபத்துதவிகள் சதி செய்து ஆதித்த கரிகாலரைக் கொல்கிறார்கள்.

ஆதித்த கரிகாலர்

சுந்தர சோழர் காலத்திலேயே ஆதித்த கரிகாலருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது. தன் பெயரில் கல்வெட்டுகள் பொறித்து சாசனம் அளிக்கும் உரிமையும் அவர் பெற்றிருந்தார். ஆதித்த கரிகாலருக்கு அப்படி ஒரு முடிவு நேராமல் இருந்திருந்தால், அவரும், அவரின் வாரிசுகளுமே சோழ சிம்மாசனத்தில் அமரும் உரிமை பெற்றிருப்பார்கள். ராஜராஜனும் ராஜேந்திரனும் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்க மாட்டார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.