‘கேரளாவில், பிஎஃப்ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு ரூ.5.06 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்’ என, கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகம் உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளா, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை கண்டித்து கேரள மாநிலத்தில் கடந்த 23-ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில், ‘பிஎஃப்ஐ அமைப்பினரால் 71 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 11 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். எனவே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் இருந்து இழப்பீடாக ரூ.5.06 கோடி பெற்றுத்தர வேண்டும் என கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.