எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் தங்களின் 25-வது ஆண்டின் துவக்கத்தை செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சீரும் சிறப்புமாக நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில், ‘உருமாறும் இந்தியா மாநாடு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் முனைவோர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஊக்கப் பேச்சாளர்கள் என பல பிரபலங்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தி விழாவைச் சிறப்பித்தனர்.
எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன், ‘நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வது மட்டுமல்லால், நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் அறிந்துகொண்டு, அவற்றை கட்டிக்காப்பவர்களாகவும் மாணவர்கள் இருக்க வேண்டும்’ என்றார்.
அடுத்ததாக பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் இ.பாலகுருசாமி, நாடு தேவையான மாற்றத்தை அடைவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானதாகும் என்பதை எடுத்துக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, ‘இஸ்ரோ’ நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன், ‘மாணவர்கள் மன உறுதியுடன் செய்லபட்டால், எந்த சாதனையும் அவர்களுக்கு கைகூடும்’ என்று ஊக்க வார்த்தைகளை பேசியதோடு, அதற்கு உதாரணமும் கூறினார்:
55 வருடங்களுக்கு முன்பு நம் நாட்டில் அதிக வசதிகள் இல்லாதபோதே, டாக்டர் அப்துல் கலாம் தலைமையில், ‘இஸ்ரோ’ ராக்கெட்டுகளில் வைத்து அனுப்பும் பேலோடுகளை மீட்டெடுப்பதற்கான அமைப்பை உருவாக்கிச் சாதனை படைத்தது என்றார்.
மேலும், சினிமா நடிகரும், ஊக்கப் பேச்சாளருமான ஆஷிஷ் வித்யார்த்தி, ‘மாணவர்கள் எதிர்கால தலைவர்கள்’ என்றும், ‘ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. அவற்றை மாணவர்கள் கண்டறிந்து பயன்பெற வேண்டும்’ என்றும் அறிவுரை கூறினார்.
புகழ்பெற்ற எழுத்தாளரும், கட்டுரையாளருமான சேத்தன் பகத், ஸ்மார்ட் போன்கள் மற்றும் காதல் போன்ற விஷயங்களால் மாணவர்கள் கவனச்சிதறல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், ‘வேலை கிடைத்தபின் பெண் நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால், பெண் நண்பர்கள் இருப்பதால் மட்டுமே வேலை கிடைப்பது சாத்தியமில்லை,’ என்று மாணவர்களின் கல்விமீது பெரும் அக்கறையோடு பேசினார் .
அதைத் தொடர்ந்து, நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் இணை நிறுவனருமான சி.கே.குமாரவேலு பேசும்போது, ‘மாணவர்கள், ‘பி.எச்.டி(PHD)’ பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, P-passion(ஆர்வம்), H-hunger(தேடல்) மற்றும் D-discipline(ஒழுக்கம்) ஆகிய மூன்றும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதற்கு பெரிதும் உதவும்’ என்றார்.
அடுத்ததாக, ஹெல்த் பேஸிக்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வான ஸ்வாதி ரோஹித், மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க, சத்துள்ள உணவு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, பியானோ மேஸ்ட்ரோ லிடியன் நாதஸ்வரம், கண்களைக் கட்டிக்கொண்டு, இரண்டு கைகளில் ஒரே நேரத்தில் வெவ்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் இசையை வாசித்து அசத்தினார்.
அதை தொடர்ந்து, 16 வயதான இயற்கை ஆர்வலர் பிரசித்தி சிங் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முகமது ஆசிம் இருவரும், ‘சாதனைப் படைப்பதற்கு வயது மற்றும் உடல் ஊனம் எதுவும் ஒரு பொருட்டல்ல’ என்பதற்கு தங்களையே எடுத்துக்காட்டாக்கிப் பேசினார்கள்.
இறுதியாக, நிகழ்ச்சியின்போது, சிறந்த ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு “இன்ஸ்பிரேஷன் குரு” விருதும், தொழில் யோசனைகளை வழங்கிய மாணவர்களுக்கு “ஸ்டூடண்ட்பிரின்யூர்” விருதும் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.
மூன்று நாட்களும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், நேரடியாகவும் ஆன்லைனிலும் கண்டுகளித்தார்கள்.
நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை அறிய கிளிக் https://youtu.be/lA-mD4EEG9Yi செய்யவும்.