முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இரண்டு நபர்களுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெர்வித்தார்.
மீண்டும் இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகியோர் இனி இது போன்ற செயலில் ஈடுபாடு மாட்டோம் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்கள்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மூன்று வார காலம் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் .