மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக, அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் நியமன வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரைத் தொடர்ந்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியும், மத்திய விசாரணை அமைப்புகள் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இப்படி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக சிக்கி வருவது, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், “மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும் டிசம்பர் மாதத்திற்குள் கைது செய்யப்படலாம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தற்போது 41 தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. வரும் டிசம்பரில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அரசு கவிழ்ந்து விடும்” என தெரிவித்தார்.
நடிகரும், பாஜக தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி பேசுகையில், “மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 21 ஏம்எல்எக்களுடன் பேசி வருகிறேன். சிறிது காலம் காந்திருங்கள் உரிய நேரம் விரைவில் வரும்,” என்றார்.