சென்னை: தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அமலாகியுள்ள நிலையில், பதிவு ரத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பதிவாளரே போலிபதிவுகள் குறித்து ஆய்வு செய்துஅவற்றை ரத்து செய்ய முடியும். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்துஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்தநிலையில், மத்திய சட்டத்தில் திருத்தம் என்பதால், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல்: பல்வேறு துறைகளின் ஆய்வுக்குப் பிறகு, இந்த சட்டத்துக்கு சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டப்படி, பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப் பட்ட தேதியில் இருந்து 30 நாட் களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனு: இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு ரத்து செய்யப்படுவது குறித்து, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, மோசடி, போலி பத்திரப்பதிவுகள் குறித்த மனுக்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், போலி பத்திரப்பதிவு ரத்து செய்யும் நடைமுறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.