திருவள்ளூர்: திருவள்ளூரில் ரூ.165 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி வத்சன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 25 ஆண்டு பூர்த்தியடைந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படக்கூடிய அனைத்து துறைகளுக்கும் மாவட்ட தலைமை அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள் செயல்படத்தொடங்கியது. மேலும் சிறு, சிறு நோய்களுக்கு கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்க்க கிராம புறங்களிலேயே ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 68 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 25 ஆண்டுக்கு முன்பு மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில் பலத்த காயம், தீக்காயம், பிரசவத்தில் சிக்கல், இருதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதி இல்லாத காரணத்தாலும், போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. அவசர சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால் அதிக உயிரிழப்பு நிகழ்ந்தது.
அரசு மருத்துவ கல்லூரி இல்லாத நிலையும் இருந்தது. தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி 2006 முதல் 2011 வரை இருந்தபோது மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவமனை கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையிலும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.385 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.220 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மாணவர் விடுதி, மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் ஏற்கனவே இருந்த பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை அகற்றிவிட்டு 5 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ.165 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 99 சதவீத பணி முடிந்துவிட்டது. 6 அடுக்கு மாடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரைதளத்தில் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் செயல்படும். மற்றொரு புறத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட உள்ளது. முதல் தளத்தில் பொதுமருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்க அனைத்து உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தில் மருத்துவ அதிகாரிக்கு ஒரு அறையும், தலைமை செவிலியருக்கு ஒரு அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2வது தளத்தில் அனைத்து விதமான உயர் அறுவை சிகிச்சைக்கான வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் 2 ஐசியூ வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. 3வது மற்றும் 4 வது தளத்தில் எலும்பு நோய்களுக்கான சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 5வது தளத்தில் 8 ஆபரேஷன் தியேட்டர்களும், 6 ஐசியூ வார்டுகளும் உள்ளன. 6வது தளத்தில் கூட்ட அரங்கமும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மொத்தம் 6 இடத்தில் லிப்ட் (மின் தூக்கி) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 படுக்கை வசதி மட்டுமே இருந்தன. தற்போது கூடுதலாக 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு 1000 படுக்கை வசதி உள்ளன. அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க 170 மருத்துவர்கள் மற்றும் 250 செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். 40 பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். வெளிநாட்டில் படித்து முடித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் நடத்தப்படும் தேர்வில் வெற்றிபெறும் பயிற்சி மருத்துவர்கள் 107 பேரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும்போது 2000 முதல் 2500 பேர் வரை வெளிநோயாளிகள் சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு நோய்களுக்காக நோயாளிகள் சென்னைக்கு செல்லவேண்டிய நிலைமை இருந்தது. அந்த நிலைமாறி திருவள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது ராணிப்பேட்டை மாவட்ட மக்கள், ஆந்திர எல்லையோர மக்கள், சென்னையை ஒட்டியுள்ள மக்கள், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் வசிக்கும் மக்கள் புதிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயன்பெறுவார்கள். இந்த தகவலை மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி வத்சன் தெரிவித்துள்ளார்.