பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் ஐந்து கிலோ உணவு பொருள்கள் இலவசமாக வழங்கும் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள் வருவாய் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதையடுத்து, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக, 5 கிலோ அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ரேஷன் கடைகள் மூலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, 80.96 கோடி பேர் இதன் மூலம் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையின் போது, அடுத்தடுத்து இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் இந்த திட்டமானது நாளை மறுதினத்துடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில் இலவச ரேஷன் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.