விராலிமலை : விராலிமலை-கீரனூர் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்தை காலை, மாலை என இரு வேளைகளில் அதிகப்படுத்தி இயக்குமாறு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விராலிமலையில் இருந்து கீரனூர் வழித்தடத்தில் அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பேரம்பூர், நால்ரோடு, நீர் பழனி, ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விராலிமலையில் இருந்து கீரனூருக்கும், கீரனூரில் இருந்து விராலிமலைக்கும் பயணித்து பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் பள்ளி முடியும் நேரத்தில் பேருந்தை அதிகப்படுத்தி இயக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் தற்போது கோரிக்கை வலுத்துள்ளது.
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கும் பள்ளி முடிந்து வீடு செல்வதற்கு இந்த பேருந்து நம்பியே உள்ளனர். காலை மாலை இரு வேலைகளில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசலில் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அதிலும் பேருந்து உள்ளே செல்வதற்கு இடம் இல்லாததால் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தை உணராமல் செல்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை இரு வேலைகளில் பேருந்தை அதிகப்படுத்தி இயக்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.