பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான புரளிக்கு பிறகு முதல்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார்.
ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட நகரில் செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு நாடு திரும்பினார். அதன் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.
வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு சீனா திரும்பும் எவரும் கரோனா பாதுகாப்பு விதிகளின்படி 7 நாட்கள் ஹோட்டலிலும் அதன் பிறகு 3 நாட்கள் வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயம் ஆகும். இதை கடைப்பிடிக்கும் வகையில் ஜின்பிங் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும் வதந்தி பரவியது.
இந்நிலையில் அதிபர் ஜின்பிங் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு முதல்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார். கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் சாதனைகள் தொடர்பாக பெய்ஜிங் நகரில் நடைபெறும் கண்காட்சிக்கு நேற்று அவர் முகக்கவசம் அணிந்து வந்தார். இதன்மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உஸ்பெகிஸ்தான் பயணத்துக்கு முந்தைய வெளிநாட்டுப் பயணமாக ஜின்பிங் கடந்த 2020 ஜனவரியில் மியான்மர் சென்று வந்தார். சீனாவின் வூகான் நகரில் கரோனா பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன் அவர் இப்பயணம் மேற்கொண்டார்.
ஹாங்காங்கில் சீனாவின் 25 ஆண்டுகால ஆட்சியை கொண்டாட ஜின்பிங் கடந்த ஜூலையில் அந்நகரில் 2 நாள் பயணம் மேற்கொண்டார். சீனாவின் முக்கிய நிலப்பரப்புக்கு வெளியில் உள்ள ஹாங்காங் நகருக்கு ஜின்பிங் சென்று வந்த பிறகு 2 வாரங்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.