தருமபுரி: ஆப்பிரிக்கன் கெளுத்தி என்ற ரகத்தை சேர்ந்த மீன்கள் நீர்வாழ் பாரம்பரிய உயிரினங்களை மொத்தமாக உண்டு அழிக்கும் குணம் கொண்டவை.
மேலும், இவ்வகை மீன்களை உணவாக உட்கொள்வோருக்கும் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, இவ்வகை மீன்களை வளர்ப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை அறிவித்துள்ளது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இவ்வகை மீன்கள் வளர்ப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், மீன்வளத்துறை, வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறையினர் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை அழித்து வருகின்றனர்.
காரிமங்கலம் வட்டம் இருமத்தூர் தொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் விவசாய நிலத்தில் இந்த மீன் பண்ணையில் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட ஆய்வில் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் வளர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.
எனவே, அந்தப் பண்ணையில் இருந்த 10 டன் மீன்களை அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்து அழித்தனர். இந்த சோதனை மற்றும் நடவடிக்கைகள் மாவட்டம் முழுக்க தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.