சென்னை: 2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை செப்.30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் மாதிரியை அனுப்பி வைக்குமாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாதிரிகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அலங்கார ஊர்தியின் மாதிரிப் படங்கள் மற்றும் 3டி அனிமேஷன் படங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் அலங்கார ஊர்தி மாதிரிகள் 4 கட்டங்களாக ஆய்வு செய்து அதன்பின்னரே, ஊர்வலத்தில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் இறுதி செய்யப்படும். சுதந்திரப் போராட்டம், 75 ஆண்டுகால சாதனைகள் உள்ளிட்ட தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பாரதியார், வ.உ.சி, வேலுநாச்சியார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் தாங்கிய அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் நிராகரித்திருந்தது. இதையடுத்து, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.