PFI அமைப்பு மீதான தடையை ஆதரிக்க முடியாது: அசாதுதீன் ஓவைசி கண்டனம்!

பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடையை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி காட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

பி.எஃப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோதமானது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் ‘பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடையை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என, அகில இந்திய மஜ்லிஸ் – இ – இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி காட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

நான் எப்போதும் பி.எஃப்.ஐ.,யின் அணுகுமுறையை எதிர்த்து, ஜனநாயக அணுகுமுறையை ஆதரித்து உள்ளேன். இருப்பினும் பி.எஃப்.ஐ மீதான இந்த தடையை ஆதரிக்க முடியாது. குற்றம் செய்யும் சில நபர்களின் செயல்களால் அந்த அமைப்பையே தடை செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல.

ஒருவரைக் குற்றவாளியாக்க ஓர் அமைப்போடு தொடர்பு கொள்வது மட்டும் போதாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த வகையான கடுமையான தடை ஆபத்தானது. ஏனெனில் இந்த தடை தனது கருத்தை சொல்ல விரும்பும் இஸ்லாமியர் மீதான தடையாகும்.

காஜா அஜ்மேரி குண்டு வெடிப்புக் குற்றவாளிகளுடன் தொடர்புடைய அமைப்புகள் செயல்பட்டு வரும் போது பி.எஃப்.ஐ அமைப்பு மட்டும் ஏன் தடை செய்யப்பட்டது. வலதுசாரி பெரும்பான்மை அமைப்புகளை அரசாங்கம் ஏன் தடை செய்யவில்லை?

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.