நாடு முழுவதும் இருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு அமைப்பு திடீர் சோதனையில் ஈடுபட்டது. இதன் நிதிப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களை சேகரித்த அதிகாரிகள், அந்த அமைப்பைச் சேர்ந்த பலரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது மத்திய அரசு. இது குறித்து நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை குறித்து மத்திய அரசுக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ” PFI அமைப்புகளின் மீது NIA கடும் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு PFI அமைப்பின் பின்புலம் என்ன? அவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? வன்முறையில் அவர்களுக்குப் பங்கு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்வதற்கு முன்பு அன்றைய உள்துறை அமைச்சர் பாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஏன் தடை செய்கிறோம் என்பதற்கான காரணங்களை விளக்கி நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் ஆதாரபூர்வமாக விளக்கம் அளித்தார்.