தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதிக்குமாறு மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி கோரப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.
இந்த ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதில் ஒருபடி மேலே சென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் கோவை, சேலம், திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறின.
ஆர்.எஸ்.எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டன. இதனால் பதற்றம் அதிகரித்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அடுத்தடுத்து நடைபெறும் தீவிர விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து அரசியல் செய்து வருகின்றன.
இதனால் ஆர்.எஸ்.எஸ் பேரணி விஷயத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதாவது, தமிழகத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இந்த சூழலில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க இயலாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாடியுள்ளனர்.