அடுத்து ஆணுறை கேட்பீங்க: பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு!

பீகார் மாநிலத்தில் ‘அதிகாரம் பெற்ற மகள்கள்; வளமான பீகார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுருடன் கலந்துரையாடினர்.

அப்போது பேசிய மாணவி ஒருவர், “அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30இல் சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஹர்ஜோத் கவுர், “இன்று நாப்கின் கேட்பீர்கள். நாளைக்கு ஜீன்ஸ் பேன்ட் கேட்பீர்கள். அதன்பிறகு, ஏன் நீங்கள் ஷூக்களை தரக்கூடாது என்பீர்கள். கடைசியாக, ஆணுறையை கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்.” என்றார். ஆனால், அந்த மாணவியோ துணிச்சலாக, அரசைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பது மக்கள் தானே. அவர்களின் வாக்குகள்தானே அரசை உருவாக்குகின்றன என்று பதிலடி கொடுத்தார்.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அந்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர், இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படி நினைத்தால், பாகிஸ்தானைப் போல் நீங்கள் வாக்களிக்க வேண்டாம். பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் நீங்கள் வாக்களிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அந்த மாணவி, நான் ஏன் அது மாதிரி இருக்க வேண்டும்; நான் ஒரு இந்தியன் என்று பதிலடி கொடுத்தார்.

குறைந்த விலைக்கு சானிட்டரி நாப்கின் கொடுங்கள் என்று கேட்ட பள்ளி மாணவிகளிடம் பெண் ஐஏஸ் அதிகாரியே, இதுபோன்று அநாகரிக முறையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாஜக தலைவர் அம்ரிதா ரத்தோட் கூறுகையில், “நிதிஷ்-தேஜஸ்வி அரசின் ஐஏஎஸ் அதிகாரியை பாருங்கள்; சானிட்டரி நாப்கின் கேட்ட பள்ளி மாணவியை பாகிஸ்தான் செல்லுங்கள் என்று கூறுகிறார்.” என சாடியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹர்ஜோத் கவுர் மறுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.