காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டம், கூடலூரில் 6 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார் ராகுல்.
அப்போது முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்டர் டோஸாக இருக்கும். சாதி, மதம், மொழி, உணவு, உடை போன்றவற்றை வைத்து பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது. பொருளாதர ரீதியில் மக்களிடம் சமமின்மை நிலவுகிறது. மாநிலங்களுக்குள்ளேயே பொருளாதரத்தில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. மாநில உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த அதிகாரத்தின் குவிமையமாக மோடி ஒருவர்தான் இருக்கிறார். பா.ஜ.க ஆட்சியில் சிறு, குறு தொழிற்சாலைகள் நலிவடைந்திருக்கின்றன. மக்களிடம் ஒற்றுமையை உருவாக்கவே இந்த நடைப்பயணம். பா.ஜ.க-வின் எல்லையான கர்நாடக மாநிலத்தில் எங்களின் நடைப்பயணம் அடுத்த 21 நாள்களுக்கு இருக்கிறது. எதற்கும் தயாராக இருக்கிறோம்” என்றார்.