“அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்” என ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட, “கட்டுப்பாடுகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்” என அடுத்த சில நிமிடங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிரடி காட்டினார் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை முன்வைத்து அதிமுகவில் நடக்கும் அரசியல் என்ன?
பண்ருட்டி ராமச்சந்திரன் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என பல்வேறு கட்சிகளில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர். ஆனால், அவர் பயணித்த அனைத்துக் கட்சிகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக விளங்கியவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும், அதன்பிறகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையிலும் மின்சாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரே பண்ருட்டி ராமச்சந்திரன்தான். அதுமட்டுமல்ல, விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்தபோது அந்தக் கட்சியின் அவைத்தலைவராக, முக்கியத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். 2013-ம் ஆண்டு தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த 2014-ம் ஆண்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
2016 தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதற்குப்பிறகு, அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களுள் ஒருவராக இருந்தாலும் பெரியளவில் அரசியல் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தார். இந்தநிலையில், ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்தபிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில கருத்துக்களைப் பேசிவந்தார். சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரன அவரது இல்லத்தில் சந்தித்தபிறகு எடப்பாடிக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க, “ஒரு கிளைக் கழகச் செயலாளருக்கு இருக்கும் தகுதிகூட அவருக்கு இல்லை” என பதிலடி கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்தநிலையில், பொதுக்குழுத் தீர்ப்புகளுக்குப்பிறகு அமைதியாக இருந்த ஓ.பி.எஸ் முகாமிலிருந்து கடந்த 27-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியானது. அதில், “அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சியின் அமைப்பு செயலாளரான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
`படக்காட்சியாகத் தெரிவதற்கு பண்ருட்டியார் பயன்படுகிறார்’
இந்தநிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு திடீரென புதிய பொறுப்பை ஓ.பி.எஸ் அறிவிக்க, உடனடியாக அவரை எடப்பாடி பழனிசாமி கட்சியைவிட்டு நீக்க.., இதன் பின்னணி என்ன?
மூத்த பத்திரிகையாளர் தராஷு ஷ்யாமிடம் பேசினோம்..,
“முதலில் அரசியல் ஆலோசகர் என்கிற பதவியே அதிமுகவில் கிடையாது. புதிதாக அப்படி ஒரு பொறுப்பை உருவாக்குவதாக இருந்தால் அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதல் வேண்டும். இப்போதைய நிலவரப்படி, இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் அதிமுகவைப் பார்க்கமுடியும். அதன்படி, ஜூலை 11 பொதுக்குழுத் தீர்மானங்கள் செல்லும் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். அதனால், ஒபிஎஸ் தனக்கு வேண்டுமானால் அரசியல் ஆலோசகர் போட்டுக்கொள்ள முடியும். அதிமுகவுக்கு யாரையும் அவர் நியமிக்கமுடியாது. பண்ருட்டியார் மிகப்பெரிய அரசியல் ஆளுமை என்பதிலோ அவரின் அனுபவம் குறித்தோ கேள்வியில்லை. ஆனால், அவரை என்றில்லை யாரையுமே அரசியல் ஆலோசகர் என்று நியமிக்க அதிமுக சட்டவிதிகள் இடம் கொடுக்கவில்லை.
எம்ஜிஆர் காலத்து ஆள்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள் எனக் காட்டிக்கொள்வதற்காக அவருக்கு இப்படியொரு பொறுப்பை ஓபிஎஸ் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ்ஸே கட்சியில் இல்லை என்பதுதான் எடப்பாடி தரப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கும் வாதம். அதிமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் பண்ருட்டியார் ஓபிஎஸ் கொடுத்த பதவியை ஏற்றுக்கொண்டிருக்ககூடாது. அந்த காரணத்தையே எடப்பாடி தரப்பு முன்வைக்கும்.
அதிமுகவில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்தக் குழப்பங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். ஆனால், தற்போதைய சூழலில், தேர்தல் ஆணையத்துக்கு இந்த விவகாரத்தை நீதிமன்றம் தள்ளிவிடும் என்றே தெரிகிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை மெஜாரிட்டிதான் பேசும். அந்தவகையில், அதிகமான எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடியின் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால், அவருக்குச் சாதகமாக வரவே வாய்ப்பிருக்கிறது. பாஜக இந்த விஷயத்தில் தலையிட்டால் மட்டுமே இது மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மற்றபடி சட்டப்படி நடந்தால் எடப்பாடியின் கைதான் ஓங்கும். பண்ருட்டி ராமச்சந்திரன் மரியாதைக்குரிய மூத்த அரசியல் தலைவர். ஆனால், அவருக்கென்று தனியான வாக்குவங்கியெல்லாம் கிடையாது. அதனால், அரசியல் ரீதியாக பெரிய தாக்கம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. செய்திகளில் வருவதற்கும், படக்காட்சியாகத் தெரிவதற்கு பண்ருட்டியார் பயன்படுகிறார் அவ்வளவுதான்” என்கிறார் அவர்.