ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருவள்ளூர் காவல் துறையினருக்கும், உள்துறை செயலாளர், டிஜிபி-க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் செப்டம்பர் 27ம் தேதி நிராகரித்துள்ளார்.
இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர்ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனுமதி மறுக்க எந்த அதிகாரமும் இல்லை எனவும், அனுமதி மறுத்த உத்தரவை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.