ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மறுத்தது சரியா… தமிழக அரசியல் களம் சொல்வது என்ன?

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் நாடியிருக்கிறது. அதேசமயம் சீராய்வு மனுவை தாக்கல் செய்து காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், துரதிஷ்டவசமான ஒன்று. 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் நூற்றாண்டை நெருங்கி கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பாகவும் ஆர்.எஸ்.எஸின் பல்வேறு ஊர்வலங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன. நானும் பல ஊர்வலங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். எந்த ஊர்வலத்திலும், எந்த இடத்திலும் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை. தற்போது இந்த ஊர்வலம் நடந்தால் பிரச்சினை ஏற்படும் என்ற போலியான காரணத்தை காட்டி இதை தடை செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் கூட வழக்கு நடந்திருக்கலாம்.

இதை நூறு சதவீதம் ஏற்றுக் கொள்ள முடியாததாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், நாடு முழுவதும் விஜயதசமியை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடத்தப்படுவது வழக்கம் தான். மாநிலத்தின் முதல்வர் ஆர்.எஸ்.எஸ் ஆகட்டும். பாஜக ஆகட்டும். எப்படியாவது அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும்.

அவர்களுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பார்ப்பது தான் திமுகவின் அரசியல். தொண்டர்களின் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் இந்த மாதிரி பல்வேறு எதிர்ப்புகளை மாற வைத்திருக்கிறது. இதையும் அந்த இயக்கம் சரியான முறையில் எதிர்கொள்ளும் என்று நம்புவதாக குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியது முழுக்க முழுக்க தவறான ஒன்று.

எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஒவ்வொரு ஊரின் நிலைமையை பொறுத்து காவல்துறை தான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது. பாராட்டக்கூடிய நடவடிக்கை என்று கூறினார். விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ் நடத்தவிருந்த ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு விசிக சார்பில் நன்றிகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.