ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த விவகாரம்: காவல்துறை தரப்பில் சீராய்வு மனு தாக்கல்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில் பல்வேறு நிபந்தனை விதித்தார்

அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது. எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லது கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது.

காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி குடிநீர், முதலுதவி, ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள, தீயணைக்கும் கருவிகள் போன்றவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை தொடர வேண்டும்.

வழியில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்தின் இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.

சாலையின் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே அணிவகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

போக்குவரத்து மற்றும் அணிவகுப்பை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறைக்கு உதவ போதுமான தன்னார்வலர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்க வேண்டும்.

காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே அணிவகுப்பு செல்வதை உறுதிசெய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.

பெட்டி வகையிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

அணிவகுப்பில் ஈடுபடுவோர் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற அமைப்பினரின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது.

பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்திற்கான செலவை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதிமொழி மற்றும் இழப்பீடு அல்லது மாற்றுச் செலவுகளை ஏற்கும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தேவையான நடவடிக்கை சுதந்திரமாக எடுக்கலாம் என உத்தரவில் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை தரப்பில் மறு சீராய்வு மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.

அதில் தற்போது உள்ள நிலைமையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உள்ளதாகவும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை விதிக்கபட்டதால் தற்போதைய பேரணியால் தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.