தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அக்டோபர் 2ஆம் தேதி நாள் காந்தி பிறந்தநாளன்று தமிழகம் தழுவிய அளவில் மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணிக்கு எதிராக இந்த மனித சங்கிலி போராட்டம் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாவட்ட வாரிய காவல்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், விசிக போராட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரி பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட இரவு காவலாளி பரமசிவம் வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மமாம்பட்டி ஏனாதியில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவ சிலையை அகற்றியதோடு விடுதலை சிறுத்தைகள், பொது மக்கள் மீது பொய் வழக்கு புனைந்த காவல் துறையை கண்டித்தும், கரூரில் சமூக செயற்பாட்டாளர் ஜெகநாதன் படுகொலையை கண்டித்து நாமக்கல்லில் இன்று பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய திருமாவளவன், “சேலம் ஏனாதியில் அம்பேத்கர் சிலை அனுமதி இல்லாமல் வைத்தது தவறு தான். தமிழகத்தில் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாகதான் வைக்க வேண்டும் என கூறுகின்றனர். இந்த நடைமுறை இந்தியாவில் எங்குமே கிடையாது. வெளிநாட்டில் புகழ் பெற்ற இடங்களில் அம்பேத்கர் சிலை வைக்கப்படுகிறது. தமிழகத்தில் சிலை வைப்பதில் பல்வேறு பிரச்சினை உள்ளன. ஏனாதில் அம்பேத்கர் சிலையை காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர், இதில் பொதுமக்கள், விசிக கட்சியினர் அடித்து துன்புறுத்தப்பட்டனர். வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைப்பது கலாச்சார விழா என்கிறனர். புதிய இந்தியாவின் தந்தையாக அம்பேத்கர் இருந்து வருகிறார், வரும் அக்டோபர் 2 ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவித்தோம். ஆனால் காவல்துறை ஆர்.எஸ்.எஸ்.க்கு, விசிக, இடது சாரிக்கு தடை விதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்தது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த அக்டோபர் 2இல் நடத்தப்படும். உச்ச நீதிமன்றத்திலும் டிஜிபி அலுவலகத்திலும் அனுமதி பெற்று அந்த போராட்டம் நடத்தப்படும். ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நடத்தப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக கட்சியினரிடம் நிதி திரட்டிய திருமாவளவன் அந்த தொகையை உயிரிழந்த இரவு காவலாளி பரமசிவத்தின் குடும்பத்தினர்க்கு வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் உள்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.