இக்கட்டான காலத்தில் தலைமை வழக்கறிஞர் பொறுப்பு… வெங்கடரமணி குறி்த்து ரவிக்குமார் எம்பி நெகிழ்ச்சி!

மத்திய அரசின் புதிய தலைமை வழக்றிஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வெங்கடரமணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி:

புதுச்சேரியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஆர்.வெங்கடரமணி (72) அவர்கள், இந்திய ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மனித உரிமைகள் மீது அக்கறை கொண்ட அவருக்கு என் வாழ்த்துகள் !

அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், மனித உரிமைகள் குறித்தும் ஈடுபாடும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். அரசியலமைப்புச் சட்டத்தை சீராய்வு செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலையா கமிஷனில் துணைக்குழு ஒன்றில் உறுப்பினராக இருந்தவர். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இரண்டு முறை இருந்துள்ளார். நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

1990 களில் புதுச்சேரியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் லாக் அப் படுகொலை வழக்கு ஒன்றை நானும், நண்பர்களும் கையிலெடுத்துப் போராடியபோது புதுச்சேரி வந்திருந்த அவரை சந்தித்து உரையாடியதாக நினைவு.

அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கில் ஆசிரியர் ஒருவருக்காக அவர் ஆஜரானார். “பிரிவினைச் சுவர்” இல்லாமல் ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் சுதந்திரமான, தடையில்லா சூழலை விரும்புகிறோம்” என அவர் வாதாடியபோது, “ஹிஜாப் பிரிவினைச் சுவரை உருவாக்குகிறதா?” என நீதிபதிகள் கேட்டனர், அதற்கு பதிலளித்த அவர், “பள்ளிகள் அடிப்படையில் இந்த அனைத்துக் கூறுகளிலிருந்தும் விடுபட வேண்டும், அங்கு ஏற்படும் ஒரு சிறிய கவனச்சிதறல் கூட சுதந்திரமான அறிவுப் பரப்பலுக்குத் தடையாக மாறிவிடும்” என்றார்.

“இதில் இன்னொரு கண்ணோட்டம் கொண்ட ஆசிரியரும் இருக்கலாமில்லையா? இது ஒரு வாய்ப்பு. இந்த பன்முகத்தன்மை கொண்ட நாட்டைப் பாருங்கள், எங்களிடம் பல்வேறுபட்ட கலாச்சாரங்களையும், மதங்களையும் பின்பற்றும் மாணவர்கள் உள்ளனர், அவர்களிடம் கலாச்சார நுண்ணுணர்வு கொண்டவர்களாக இருங்கள்” என்று அவர் கேட்கலாமில்லையா ?” என்று நீதிபதிகள் கேட்டனர். தற்போது அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினரிலும் கிரீமிலேயரைக் கண்டறிந்து இடஒதுக்கீடு பெறுவதிலிருந்து அவர்களை நீக்க வேண்டும் என அவர் வாதாடிய ஒரு வழக்கை 2015 இல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி முதல்வராக மாதவ மேனன் இருந்தபோது சட்டப்படிப்பை முடித்த (1977) திரு. வெங்கடரமணி, 1979 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். 1990 களின் பிற்பகுதியில் அவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட இருந்தபோது அவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வாய்ப்பு நழுவிப்போனதென நீதிபதி கே.சந்துரு ஒரு கட்டுரையில் ( A judgement in poor taste, The Hindu, 07.06.2016) குறிப்பிட்டிருக்கிறார்.

‘நீதித்துறை தான் நம்மைப் பாதுகாக்க வேண்டும்’ என பொதுமக்கள் நினைக்கிற இக்கட்டான காலத்தில் இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பை ஏற்கும் திரு ஆர். வெங்கடரமணி நீதியின் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருப்பார் என நம்புகிறேன் என்று விசிக எம்பி ரவிக்குமார் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.