மதுரையில் நடந்த தொல்.திருமாவளவனின் மணிவிழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் எம்.பி நவாஸ்கனி பேசும்போது, “பா.ஜ.க ஒன்றும் வெல்ல முடியாத கட்சியல்ல. 32 சதவிகித வாக்குகளை பெற்று ஆட்சியமைத்து, அகற்ற முடியாத கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். வருகின்ற தேர்தலில் அவர்களை வீழ்த்தி மதசார்பற்ற அரசு அமைக்கப்படும். சிறுபானமையினருக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் திருமாவளவன்” என்றார்.
முத்தரசன், “பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் ஆ.ராசா தவறாக ஒன்றும் பேசவில்லை. அவர் சனாதன மதத்தில மக்களை எப்படி குறிப்பிடுகிறார்கள் என்பது குறித்து பேசினார். அதை நானும் வழிமொழிகிறேன். வேண்டுமானால் என்னையும் சேர்த்து திட்டு. ஆ.ராசா-விடமாது எம்.பி பதவி இருக்கு. எங்கிட்டே புடுங்குறதற்கு ஒன்றுமில்லை. மாநில செயலாளர் பதவிதான் உள்ளது. அதையும் என் கட்சியினர்தான் எடுக்க முடியும்.
ஏற்கனவே பிள்ளையார் குறித்து ஒரு இதழில் வந்திருந்த செய்தியை சொன்னதற்கு பல ஊரிலிருந்தும் என்னை வெட்டுவேன், குத்துவேன் என்று மிரட்டினார்கள். சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுனர் ரவி பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார்.
எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில், “நாமெல்லாம் திருமாவுக்கு வாழ்த்து சொல்வது ஆச்சரியமில்லை. ஹெச்.ராஜா திருமாவை கைது செய்ய வேண்டும் என்கிறார். இதைவிட வாழ்த்து இருக்க முடியாது. காரணம், சனாதனத்தின் சங்கில் ஓங்கி மிதித்துக் கொண்டிருக்கிறார் திருமா. அம்பேத்கர் ஆரம்பித்த சனாதன எதிர்ப்பை திருமா தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்து என்ற அடையாளத்துக்கு எதிரி தமிழ்தான். அதனால்தான் இந்து அடையாளப்பெயரை மாற்றி தமிழ் பெயர்களை வைப்பதை ஒரு இயக்கமாகவே செய்து வருகிறார். சனாதனத்தை தூக்கி எறிகிற தேர்தலாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும்.” என்றார்.
அமைச்சர் பி.மூர்த்தி, “ஏற்கனவே பேசியவர்கள் பேச்சாற்றலில் திறமையானவர்கள். நான் அப்படி அல்ல. திருமாவை பொறுத்தவரையில் அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர். மதுரையில் விசிக ஆரம்பித்த 1990-லிருந்து நான் அறிவேன். சமூக நீதியை நிலை நிறுத்தவே என் மகன் திருமணத்தில் ஏற்றத்தாழ்வில்லாமல் விருந்து ஏற்பாடு செய்தேன். அதையும் அரசியலாக்கி விட்டார்கள்.” என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “அங்கனூரில் பிறந்து அங்கிங்கினாதபடி அனைத்து பகுதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சில் தங்க சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் திருமா. தந்தை மகனுக்கு பேர் சூட்டுவார். ஆனால், தந்தைக்கே ராமசாமி என்ற பெயரை தொல்காப்பியன் என்று மாற்றியவர் திருமா. தமிழகத்தில் லட்சக்கணக்கான பேர்களுக்கு தமிழில் பெயர் சூட்டியவர். எளிய குடும்பத்தில் பிறந்து முனைவர் பட்டம் உட்பட பல பட்டங்களை பெற்றவர். 20 வயதிலயே மதுரையில் மலைச்சாமி நடத்திய தலித் பேந்தர் இயக்கத்தில் சேர்ந்தார்.
வி.சி.க.வை 1990 -ல் தொடங்கிய உடனே தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. 8 வருடங்களுக்கு பிறகுதான் தேர்தலில் போட்டியிட்டார். இன்று வட இந்தியாவில் அனைவரும் கைகாட்டும் தலைவராக திருமாவளவன் உள்ளார். நானும் அவரும் உயிர் நண்பர்கள். சட்டக்கல்லூரியில் அவர் படிக்கும்போதே என்னைத் தேடி வருவார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சனாதனத்தின் ஒரே எதிரி திருமாதான்.
சனாதனத்தை எதிர்க்க ஊழித்தீபோல் பெரியார் புறப்பட்டு வந்தார். அண்ணா, கலைஞர் வந்தார். தற்போது ஸ்டாலின் வந்துள்ளார். சனாதனவாதிகளின் அகண்ட பாரத கனவு பலிக்காது. பல தேசிய இனங்கள் மொழிகள் கொண்ட நாடு இந்தியா. இதை ஒழிக்க முடியாது.
திருமாவை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கலைஞரும் சொன்னார். நானும் பலமுறை சொன்னேன். தமிழக அரசியல்வாதிகளில் காமாரஜருக்கு பிறகு திருமணம் செய்யாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர் திருமா மட்டும்தான்.” என்றார்.
பின்பு ஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன், “கடந்த பிறந்த நாளின்போது சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற கருப்பொருளில் பல ஊர்களில் விழாக்களை ஒருங்கிணைத்தோம். அதைப்போலவே தற்போது அனைத்து தலைவர்களையும் ஒன்று சேர்த்து விழா நடத்துகிறோம்.
கடந்த மாதம் சென்னையில் நடந்த விழாவில் தகைசால் தமிழர் நல்லக்கண்ணு, ஆசிரியர் கி.வீரமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள நடந்தது. இப்போது மதுரையில் வைகோ உள்ளிட்ட தலைவர்களை மேடையேற்றியுள்ளோம். இந்த விழாவின் கருப்பொருள் சனாதன எதிர்ப்பு. இதுவே என் பிறந்த நாள் பிரகடனம்.
எக்காலத்திலும் பா.ஜ.கவோடு கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காவது அ.தி.மு.க, பா.ம.க பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
அன்று மதுரையில் விசிகவின் முதல் கொடி ஏற்றப்பட்டது. அதுவே இன்று பரிணாமம் பெற்று வளர்ந்திருக்கிறோம். வைகோ என்னை உயிர் நண்பர் என்று கூறினார்.. அவர் அண்ணன் நான் தம்பி. இதுதான் எங்கள் உறவு. அவர்தான் என்னை கலைஞரிடம் அறிமுகப்படுத்தி அவர் நெஞ்சில் நீங்கா இடம்பெற வைத்தார். வைகோவின் கர்ஜனை பேச்சைக்கேட்டு வளர்ந்தவன்.
நாம் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை. காரணம் நாம் அம்பேத்கர், பெரியார் கொள்கையில் செல்கிறவர்கள்.
இன்று நாட்டில் சனாதன நச்சுக்கருத்து வேகமாக பரவி வருகிறது. அதை அனுமதிக்க முடியாது. ஒருபக்கம் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை தொட்டு வணங்குவது, இன்னொரு பக்கம் புதிய சட்டத்தை உருவாக்குவது. ஒருபக்கம் தலித் மக்கள் காலை கழுவுவது, இன்னொரு பக்கம் சமூக நீதியை அழிப்பது. இதுதான் சனாதனம்.
அதானி வேறு யாருமல்ல. மோடி, அமித் ஷாவின் பினாமி. கார்பரேட்டுகளுக்கு வேலை செய்பவர் மோடி. கார்பரேட் மயம், சனாதன மயம்.
சனாதன் என்ற வடமொழி சொல்லுக்கு நிலையானது, மாறாததது என்று பொருள். எதுவும் மாறிக்கொண்டே இருப்பது என்று சொல்வது பவுத்தம், மார்க்சிசம். பா.ஜ.க மாறும். 2024 -ல் பாஜக ஆட்சிக்கு பாடை கட்டப்படும். அதே நேரம், சனாதனம் என்பது வர்ணம் மாறாதது என்பதை வலியுறுத்துகிறது.
அது எப்படியென்றால் பாண்டிய பரம்பரை, சோழ பரம்பரை, பல்லவ பரம்பரை, சத்ரியன் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்களின் குடியிருப்பில் குடியேற முடியாது. சங்கர மடத்தில் கீழே உட்கார வேண்டும். ஆளுநர் ஆக இருந்தாலும் அதுதான் நிலை. 3 சதவிகிதம் இருக்கும் பிராமணர்கள் என்றும் பாதிக்கப்பட்டதில்லை. அவர்களை ஓ.பி.சி.க்கள் பாதுகாக்கிறார்கள்.
சாதி மாறி திருமணம் செய்கிறவர்களை ஆணவக்கொலை செய்யத் தூண்டுகிறது சனாதானம். மேலே உள்ள சாதிக்கு நான் அடிமை, எனக்கு கீழே இன்னொரு சாதி அடிமையாக உள்ளது என்ற இரண்டு உளவியலை சத்ரியன், வைசியன், சூத்திரனுக்கு உருவாக்கி வைத்துள்ளார்கள். அவர்கள்தான் சனாதனத்தை பாதுகாக்கிறார்கள்.
எல்லோரும் இந்து என்று சொல்லும் அண்ணாமலையே, உன்னால் மோகன் பகவத் வீட்டிலோ, ஏன் ஹெச் ராஜா வீட்டிலோ போய் சம்பந்தம் பேச முடியுமா? சூத்திர இந்துவாக இருக்கிற அண்ணாமலையும், பிராமண இந்துவாக இருக்கிற ஹெச்.ராஜாவும் சமமில்லை. இதுதான் சனாதானம். இவ்வளவு ஏன், சனாதனத்தில் பிரமாணப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் எந்த உரிமையும் இல்லாத சூத்திரர்கள்தான்.
பி.எப்.ஐ அமைப்பை தடை செய்துள்ளீர்கள். அதற்குள் நான் செல்லவில்லை. ஆனால், அனைத்து பயங்கரவாத செயல்களை செய்யும், இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக புதிய சட்டத்தை உருவாக்கியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடை செய்தீர்களா? அது என்ன ஜனநாயக இயக்கமா? மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.க தூக்கி எறியப்பட வேண்டும். அதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்” என்றார்.