புதுடெல்லி: ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட `பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் மாதம் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை நடை முறைப்படுத்தியது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஏராளமானோர் உணவின்றித் தவித்தனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒருவருக்கு மாதம் 5 கிலோ என்ற வீதத்தில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டம் தொடக்கத்தில் 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்குஅறிவிக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக இந்த திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த மாதத்துடன் இத்திட்டம் நிறைவடையும் நிலையில், மத்திய அரசு மேலும் 3 மாதங்களுக்கு, இத்திட்டத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரை அடுத்த 3 மாதங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7-வது முறை நீட்டிப்பு
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறும்போது, “ஏழாவது கட்டமாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முந்தைய 6 கட்டங்களில் இத்திட்டத்துக்கு ரூ.3.45 லட்சம் கோடி செலவிடப் பட்டுள்ளது. ஏழாவது கட்டத்துக்கு ரூ.44,761 கோடி செலவிடப்பட உள்ளது. அடுத்த 3 மாதங்களில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 122 லட்சம் டன் உணவு தானியங்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன” என்றார்.