ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் அ.தி.மு.க-வில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தனக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கும் வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இருந்தபோதிலும், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணமோ, பொதுக்கூட்டமோ நடத்தப்படவில்லை. இந்நிலையில், செப்.29-ம் தேதி மதுரை மற்றும் விருதுநகரில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர் ஓ.பி.எஸ் தனது சமூகம் சார்ந்தே இயங்கி வருகிறார். இந்த சமயத்தில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அசம்பாவிதம் எதுவும் நடந்து விடுமோ என்று தான் தயக்கம் காட்டினார்.
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு விழாவுக்கு வந்து சென்றார். ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓ.பி.எஸுக்கு இருந்த சமூக செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நந்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா, ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடியிடம் தெரிவித்தனர்.
மேலும் பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதற்கிடையே, அண்ணா பிறந்தநாள் விழாவையும் அ.தி.மு.க நடத்தி வருகிறது. அதன்படிதான், மதுரை, விருதுநகரில் செப்.29-ம் தேதி(இன்று) பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் தேவர் ஜெயந்தியை மையமாக வைத்து ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்றனர்.
இடைக்கால பொதுச் செயலாளராக ஆன பின்னர், முதல் முறையாக தென் மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருப்பது, எடப்பாடி பழனிசாமி மீதான எதிர்பார்ப்பை கட்சிக்குள் எகிற செய்திருக்கிறது