டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட்டை தேர்வு செய்வது குறித்து மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியுடன் சோனியாகாந்தி ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது. காங்கிரஸ் தலைவர் பதவியேற்க ராகுல்காந்தி மறுத்ததை தொடர்ந்து அந்த பதவிக்கான தேர்தலில் களமிறங்க மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல் மந்திரியான அசோக் கெலாட்டை சோனியா கேட்டுக் கொண்டார்.
முதல்வர் பதவியில் இருந்து அவரை மாற்றக்கூடாது என்று கெலாட் ஆதரவாளர்கள் பிடிவாதம் பிடித்ததால் காங்கிரஸ் தலைமைக்கு சங்கடம் ஏற்பட்டது. மேலும் சச்சின் பைலட்டை முதல்வராக ஏற்க மாட்டோம் என்று ராஜஸ்தான் அமைச்சர்கள் சிலர் பகிரங்கமாக அறிவித்தனர். இதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் கெலாட்டுக்கு பதில் வேறுயாரை தலைவர் பதவிக்கு கொண்டுவருவது போன்றவை குறித்து ஏ.கே.அந்தோணியுடன் சோனியாகந்தி ஆலோசனை மேற்கொண்டார். இது போன்ற மற்றோரு மூத்த தலைவரான பவன்குமார் பன்சாலை ஏ.கே.அந்தோணி சந்தித்து பேசினார்.
இதனிடையே கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட நாளை மனுதாக்கல் செய்கிறார். இது போன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திக் விஜய்சிங்கும் மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் டெல்லி வருகை தந்துள்ளார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இன்று அவர் மனுதாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக கட்சி தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.