புதுடில்லி: பயணியர் கார்களில் ஆறு ‘ஏர் பேக்’ என்ற பாதுகாப்பு வசதியை கட்டாயமாக்கும் திட்டம், ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகளவில் இயங்கும் வாகனங்களில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. அதே நேரத்தில் உலகளவில் நடக்கும் விபத்துகளில், 10 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2021ல் மட்டும் சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது நாளொன்றுக்கு 426 பேர், ஒரு மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.சாலை விபத்துகளின்போது உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கார்களில் பயணம் செய்யும்போது, திடீரென விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கும் வகையில், அதில் ஏர் பேக் வசதி உள்ளது.உயர்ரக கார்களில், எட்டு ஏர் பேக் வசதி உள்ளது. அதே நேரத்தில் சிறிய கார்களில் தற்போதைக்கு, இரண்டு ஏர் பேக் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு அக்., 1 முதல், சிறிய கார்களிலும், ஆறு ஏர் பேக் வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:ஆறு ஏர் பேக் வசதியைஏற்படுத்துவதை கட்டாயமாக்கும் திட்டம், அடுத்தாண்டு, அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கார்களுக்கான ஏர் பேக் வெளிநாடுகளில் இருந்து வருவதில் உள்ள சிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறையினர் சந்தித்து வரும் பொருளாதார பிரச்னை போன்றவற்றை கருத்தில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், அனைத்து பயணியரின் உயிரை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement