புதுடெல்லி: திருமண ஆனவர், ஆகாதவர் என்று இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி உண்டு என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. திருமணம் ஆகாத பெண்களும் கருகலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமா கோலி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதில், ‘உலகம் முழுவதும் கிட்டத்ததட்ட 67% கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் நடக்கிறது என உலக சுகாதார புள்ளி விவரம் கூறுகிறது. இது, சட்டப்பூர்வ கருக்கலைப்பு மறுக்கப்படுவதால் ஏற்படுகிறது. அதனால் சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள். இதில் திருமணமானவர், திருமணமாகாதவர் என்று பிரித்து பார்க்கக்கூடாது. கருக்கலைப்பு என்பது திருமணமான பெண்களுக்கு மட்டுமே என கூறுவது அவர்களை பாகுபடுத்துவதாகும். குறிப்பாக அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 14க்கு எதிராக அது அமையும்.
பழமை மற்றும் குறுகிய காரணங்களை வைத்து செயற்கையான வகைப்பாட்டை சட்டம் உருவாக்கிவிடக் கூடாது. தேவையற்ற கருத்தரிப்பு, இன விருத்தி ஆகியவற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளையும் அரசுகள் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவ சிகிச்சை என்பது திருமணமானவர், திருமணமாகாதவர், சாதி உள்ளடவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும். எந்த காரணங்களுக்காவும் மருத்துவம் மறுக்கப்படக் கூடாது. பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கருத்தரிக்க வைப்பது என்பது பாலியல் வன்கொடுமையே ஆகும்.
தேவையற்ற கர்ப்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் சமூக தாக்கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சில அவசர சூழலில் இருக்கும் பெண் ஒரு கருவை தக்க வைப்பதும், கர்பத்தை தக்க வைக்க வேண்டாம் என்று முடிவெடுப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை ஆகும். அதனால் திருமணமான பெண்கள் தேவைப்படும் பட்சத்தில் 24 வாரம் வரையிலான தனது கருவை கலைக்க வழிவகைச் செய்யும் சட்டப்பிரிவு 3(2) (பி)-ஐ, திருமணமாகாத பெண்களுக்கும் பொருந்தும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.