சென்னை: சீன அதிபர், ஜி ஜின் பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். சென்னையில் படித்து கொண்டிருந்த திபெத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
சாலையில் சென்ற பேருந்துகளை நிறுத்தி சேதப்படுத்தியது மற்றும் பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நீலாங்கரை மற்றும் சேலையூர் காவல் நிலையங்களில் வழக்குபதிவு செய்திருந்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி டென்சிங் லுப்சங் உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி, ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மாணவர்கள் தரப்பில், தாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள். அந்த சமயத்தில் கல்லூரி மற்றும் விடுதி மூடிவிட்டதால் வீட்டிலிருந்த தங்களை போலீஸார் வலுக்கட்டயமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தடையை மீறி எந்த போராட்டமும் நடத்தவில்லை.போலீஸார் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். காலாவதியான சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திபெத் மாணவர்கள் 9 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.