ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றனர். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவிகளில் கும்மாடி ஜெய ஸ்ரீ (14), சுவர்ண கமலா (14), கீதாஞ்சலி (14) ஆகிய 3 மாணவிகள் திடீரென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 மாணவிகளையும் மீட்க தீவிரமாக போராடினார்கள். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 மாணவிகளின் உடலை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து அம்மாணவிகளின் பெற்றோர்களுக்கு எந்தவித தகவலும் பள்ளி நிர்வாகத்தால் அளிக்கப்படவில்லை. ஊடகங்கள் வாயிலாக தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள் பள்ளி பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உயிரிழந்த தங்களின் மகளை பார்த்து கதறி அழுதனர். இதில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மற்றொரு மாணவியின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. சுற்றுலா சென்ற இடத்தில் 3 மாணவிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.