ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டாலும், செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று இரவே வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 9 ஆம் தேதி வரை விடுமுறைக்கு திட்டமிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர். கிட்டதட்ட 9 நாட்கள் விடுமுறை என்பதால், பேருந்துகளில் கூட்டம் அலைமோத இருக்கிறது.
குறிப்பாக சென்னையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்வோர், தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்ல, வழக்கமான கட்டணத்தைவிட 3 மடங்கு வசூலிக்கின்றனர். இது தொடர்பாக பலரும் அரசுக்கு புகார்களை அனுப்பத் தொடங்கியிருக்கின்றனர். இருப்பினும் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை குறைப்பதாக இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களின் வசதிக்காக அரசு பேருந்துகள் இயக்கத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து பேசிய தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 1,300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தனியார் பேருந்துகளின் கட்டண அதிகரிப்பும் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.