சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் ரயில் மற்றும் பேருந்தில் தொங்கியபடி அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சாசகம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடுவது வைரல் வீடியோவாக வருகிறது. ரயிலின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்வது, ரயில் பெட்டிகளில் கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செய்வது, பேருந்தில் தரையில் கால்கள் உரச பயணம் செய்வது என மாணவர்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலில், இளைஞர்கள் சில ரயிலின் மேல் ஏறிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். வெளியில் தொங்கியபடியும், ரயில் மீது ஏறியும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ரயிலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்களை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக சென்னை தி.நகரில் இருந்து செம்மஞ்சேரி வரை செல்லும் பேருந்தில் பள்ளி சீருடையில் அரசு பள்ளி மாணவன் ஒருவன் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக் கொண்டே செருப்பு காலுடன் தரையில் தேய்த்து ஸ்கேட்டிங் செய்வது போல சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடித்தக்கது.