புதுடெல்லி: பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர். அதற்கு முன்னதாக கடந்த 17-ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
அஜித் தோவல் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள், தியோபந்தி, பரெல்வி மற்றும் சூபி செக்ட்ஸ் ஆப் இஸ்லாம் உள்ளிட்ட மிகப்பெரிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பிஎஃப்ஐ மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிஎஃப்ஐ உள்ளிட்ட 9 அமைப்புகள் மீது மத்திய அரசு தடை விதித்ததை சூபி மற்றும் பரெல்வி மதகுருமார்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து அனைத்து இந்திய சூபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாத செயலை தடுக்க சட்டப்படி பிஎஃப்ஐ உள்ளிட்ட அமைப்புகள் மீது மத்திய அரசு தடை விதித்துள் ளது. எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என கூறப்பட்டுள்ளது.
அஜ்மீர் தர்காவின் ஆன்மிக தலைவர் ஜைனுல் அபிதின் அலி கான் கூறும்போது, “மத்தியஅரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நாட்டை பிளவுபடுத்தவோ, ஒற்றுமை மற்றும் இறையாண்மை, அமைதியை சீர்குலைக்கவோ முயல்வோருக்கு இங்கு வாழும் உரிமை இல்லை” என்றார்.
அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரெல்வி வெளியிட்ட வீடியோவில் “தீவிரவாத செயலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சரியானது” என கூறியுள்ளார்.