தாஜ்மஹாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் பார்க்கணும் : சரத்குமார்

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் நாளை(செப்., 30) வெளிவருகிறது. இதில் சரத்குமார் நாவலின் முக்கிய கேரக்டரான பெரிய பழுவேட்டரையராக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு :

நான் நடித்துள்ள பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், ஒரு நாட்டின் ராஜாக்கள் மாறலாம், நாட்டின் நலன் மாறக்கூடாது என்று கருதுகிறவன். ஆனால் அவர் விழுந்தது ஒரு பெண்ணிடம். அதுதான் பொன்னியின் செல்வன் கதையின் சாராம்சம். அப்படியொரு முக்கியமான கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன்.

பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி.

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும். இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இந்தியாவில் தாஜ்மஹாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்க வேண்டும்.

இந்த கேரக்டருக்காக தேர்வு செய்யப்பட்டதும், ஏற்கெனவே நான் நாவலை பலமுறை படித்திருந்தாலும், மணிரத்னம் மிகச் சிறந்த வழிகாட்டுதலை தந்தார். அதனால் சிறப்பாக நடிக்க முடிந்தது. என்றாலும் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க பயம் இருந்தது. அவருடன் காதல் காட்சிகள் இருக்கிறது. தொட்டு நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதனால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது அவர் தவறாக எதுவும் நினைத்து விடுவாரோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் அந்த காட்சிகளில் ஒரு நடிகையாக மட்டும் இருந்தார். உலக அழகி என்ற எண்ணமோ, அமிதாப்பசன் மருமகள் என்ற எண்ணமோ, அபிஷேக் பச்சன் மனைவி என்ற எண்ணமோ அவரிடம் இருக்கவில்லை.

தற்போது 20 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும், குணசித்ரமாகவும் கலந்து நடித்து வருகிறேன். நடிப்புதான் எனக்கு வருமானம் தரும் வேலை, அதில் தீவிர கவனம் செலுத்த இருக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.