திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்… ஜனநாயக முறைப்படிதான் நடந்ததா?!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. அதன்படி, அ.தி.மு.க-வில் எடப்பாடி – பன்னீர் ஒன்றாக இருந்தபோதே தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. தி.மு.க-விலோ இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கி, தற்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது தேர்தல். உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்திருக்கிறதா? என்று அறிவாலய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

ஸ்டாலின்

“ஜனநாயக முறையில் பெட்டி வைத்து, வாக்குப்பதிவு முறையில் உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசைதான். ஆனால், எதார்த்தச் சூழல் அப்படியில்லையே!

எல்லாக் கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல் இருப்பது வாடிக்கைதான். தி.மு.க-வில் அளவுக்கு அதிகமாகவே அது வெளிப்படும். போட்டி என்று வந்துவிட்டால் பலர் குதிப்பார்கள். கிட்டத்தட்ட மினி சட்டமன்றத் தேர்தல் அளவுக்கு அதனை நடத்தியாக வேண்டும். அது தேவையற்றப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் ஒட்டுமொத்தமாக அனைத்துப் பொறுப்புகளுக்கும் பெட்டி வைத்து தேர்தல் என்கிற முறை தவிர்க்கப்படுகிறது.

அறிவாலயத்தில் குவிந்த திமுக நிர்வாகிகள்

‘இருப்பவர்கள் அப்படியே தொடரட்டும், பெரும்பாலான புகார்களுக்கு உள்ளானவர்களை மட்டும் மாற்றினால்போதும்’ என்பதுதான் தலைமை வாய்மொழியாக சொல்லிய தாரக மந்திரம். அதை சிலர் சரியாகப் பயன்படுத்தவும் செய்தார்கள், சிலர் தவறாகவும் பயன்படுத்தினார்கள். பேருர் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் தேர்தல் வரை இதுதான் நடந்திருக்கிறது. சில இடங்களில் அதிகப் புகாருக்குள்ளானவர்களை மீண்டும் தேர்வுசெய்தனர். இன்னும் சில இடங்களில் புகார் சொல்லப்படாதவர்களை பொறுப்பிலிருந்து நீக்கினர். இரண்டுக்குமே தலைமையின் வாய்மொழி உத்தரவினை ஆதாரமாகக் காட்டினர். இதனால் பல மாவட்டங்களில் எதிர்ப்புத் தெரிவித்து அறிவாலயத்துக்கு வண்டிகட்டிக்கொண்டு வந்து புகாரளித்துவிட்டுச் சென்றனர். பேரூர் செயலாளர் பொறுப்பிலிருந்து, மாநகரச் செயலாளர் பொறுப்பு வரை அத்தனையையும் நடத்தியது மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பாளர்களும்தான். அவர்கள் மீதுதான் அத்தனைப் புகார்களும் நிர்வாகிகளால் கொடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கே தேர்தல் நடந்தால், அதனை எப்படி நடத்துவார்கள்? தலைமையே சொன்னாலும் மா.செ-க்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மற்ற பொறுப்புகள் எப்படி நியமனங்கள் போல வெளியானதோ, அதுபோல மாவட்டச் செயலாளர் பதவியும் நியமனங்கள் போலத்தான் வெளியாகும். 77 மாவட்டங்களாக இருந்ததை கட்சித் தலைமை 72 மாவட்டங்களாகக் குறைத்துவிட்டது. கோவை, திருப்பூர், தருமபுரி ஆகிய வருவாய் மாவட்டங்களில் கட்சி அமைப்பு ரீதியாகவும் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது 7 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். இதன்படி பார்த்தால் கிட்டத்தட்ட 65 மாவட்டச் செயலாளர்கள் போட்டியின்றி மீண்டும் தொடர்கிறார்கள். வெளியில் பெயரளவுக்கு ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர, உட்கட்சித் தேர்தலில் அப்படியில்லை என்பதுதான் நிதர்சனம்!” என்று முடித்தார்.

ஆர்.எஸ் பாரதி

ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி தி.மு.க என்று எல்லோருமே சொல்லிக்கொள்கின்றனர். ஆனால், அதன் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி பெட்டிவைத்து, வாக்களித்து தேர்வுசெய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். இதற்கான காரணம் குறித்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். “மனுத்தாக்கல் செய்யும் தேதி, மனுவை வாபஸ் பெறும் தேதி என்று சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்தான் தி.மு.க உட்கட்சித் தேர்தலிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. போட்டியில்லை என்பதால் தேர்தலும் இல்லை. யாரையும் கட்டாப்படுத்தவில்லை. மாவட்டங்களுக்குள் காம்பிரமைஸ் செய்துகொண்டனர். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு, சர்வாதிகாரமாக இவர்தான் மாவட்டச் செயலாளர் என்று டிக் செய்வதுதான் நியமனம் என்று அர்த்தம். இது அப்படியல்ல. பெட்டி வைத்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற அவசியம் ஏற்படவில்லை. இது உட்கட்சித் தேர்தல்தானே, அதனால் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசித் தீர்த்துக்கொண்டனர். ஒரு கட்சியில் இதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்!” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.