நாகர்கோவில்: மின்னிணைப்பும் வழங்கப்பட்ட நிலையில் நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் அடுத்த மாதம் திறந்து செயல்பாட்டிற்கு வர உள்ளது. நாகர்கோவில் – காவல்கிணறு நான்கு வழிசாலையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதிசாரம் டோல்கேட் செப்டம்பர் 24ம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்க பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் வழியாக கார், ஜீப், வேன், இலகுரக வாகனம், இலகுரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம், மினி பஸ், பஸ் , டிரக், மூன்று அச்சு கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள், மண் ஏற்றி செல்லும் வாகனம், பல அச்சுகள் கொண்ட (4 முதல் 6 அச்சுகள் ) உள்ள வாகனம், அதிக அளவாக 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் வாகனம் ஆகியவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வணிக உபயோகம் இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2022-23ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.315 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விபரங்கள் நான்குவழி சாலையின் இருபுறமும் உள்ள விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டோல்கேட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் செப்டம்பர் 24ம் தேதி டோல்கேட் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் டோல்கேட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகள் மின்ெனாளியில் ஜொலிக்கிறது. அக்டோபர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் டோல்கேட் பயன்பாட்டிற்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.