திருமலை: திருப்பதி ஏழுமலையான் ேகாயில் பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று மதியம் ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக ஜப்பானில் இருந்து ஆப்பிள், மஸ்கட்டில் இருந்து திராட்சை, கொரியாவில் இருந்து பேரிக்காய், தாய்லாந்தில் இருந்து மாம்பழங்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்து செர்ரி பழங்கள் வரவழைக்கப்பட்டு மலையப்ப சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மலையப்ப சுவாமிக்கு ராகி மாலை, பவளம், ஏலக்காய், கசகசா, திராட்சை, துளசி ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து நடந்த இரவு உற்சவத்தில் மலையப்ப சுவாமி சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
3ம்நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் 4 மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக, மனிதர்களிடம் உள்ள விலங்குகளுக்கு உண்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
சுவாமி வீதி உலாவில் கேரள செண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பஜனைகள் பாடியபடியும், பல்வேறு சுவாமி வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இன்றிரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி முத்து பந்தல் வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
ரூ.3.03 கோடி காணிக்கை: ஏழுமலையான் கோயிலில் நேற்று 64,823 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 22,890 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். சுவாமியை தரிசித்த பக்தர்கள் ரூ.3.03 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை முதல் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.