புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில், 25 வயதான, திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒருமித்த உறவின் விளைவாக தான் கர்ப்பம் அடைந்ததாகவும், 23 வாரங்கள் மற்றும் 5 நாட்களான கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கு உரிமை உள்ளது. இந்த விஷயத்தில் திருமணமான பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
திருமணமாகாத பெண்களும், ஒருமித்த உறவின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பத்தை 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். இதற்கான சட்டப்பூர்வ உரிமை அவர்களுக்கு உள்ளது. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க ஒரு பெண்ணின் திருமண நிலையை காரணம் காட்ட முடியாது. தனியாக வாழும் அல்லது திருமணம் ஆகாத பெண்களுக்கு தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது. இதை பறிப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கான வரையறையில் கணவன்மார்களின் கட்டாய உறவையும் சேர்க்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.