புதுடெல்லி,
சர்வதேச விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜூனா விருது, சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா, விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்போருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் வீரர், வீராங்கனைகளின் கடந்த 4 ஆண்டு சாதனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு விருதுடன், ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்தவர்கள் செப்டம்பர் 27-ந் தேதிக்குள் (நேற்று முன்தினம்) தங்களது விண்ணப்பங்களை ‘ஆன் லைன்’ மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி வருகிற 1-ந் தேதி வரை விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம்.