உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தாங்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்த விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்களை வீடியோ எடுத்ததாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பல பெண்கள் இணைந்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
சில வாரங்களுக்கு முன்பு சண்டிகர் பல்கலைக்கழக சர்ச்சையைப் போன்று, பெண்கள் விடுதியில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி, மாணவிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் நகரின் சாய் நிவாஸ் பெண்கள் விடுதி தங்கியிருக்கும் மாணவிகள், பணியாளரின் மொபைல் போனில், ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், குறிப்பாக, மாணவிகள் குளிப்பது போன்ற ஆபாச வீடியோக்களையும் கண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அந்த ஊழியர் பட்டப்பகலில் இதுபோன்ற வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து தாங்கள் புகார் அளித்துள்ளதாக என்று ஒரு மாணவிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் மொபைல் போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
சில நாள்களுக்கு முன், சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில், மாணவி ஒருவர் மற்ற மாணவிகள் குளிக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்து, பலரிடம் பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், போலீசார் தரப்பில், அந்த பெண்ணின் வீடியோவை மட்டுமே அவர் மற்றொருவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில், அந்த பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.