நானாவது இரட்டை வேடம் போடுகிறேன்… ஆனால் ஓபிஎஸ் பல வேடம் போடுகிறார் – துரைமுருகன்

ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது என அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டியளித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே, சித்தூர் திருத்தணி சாலையை இணைக்கும் தரைபாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பழுதானது. இந்நிலையில், அதே இடத்தில் புதியதாக ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அமைச்சர்… இந்த ஆட்சியில் யார்? யாருக்கு? என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை கொடுத்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு எப்போது என கேட்கிறார்கள் கவலை படவேண்டாம் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் இதற்காக சில்லரை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.
image
பொதுவாக மனிதர்களுக்கு தான் வியாதி வரும். ஆனால், பொன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு வியாதி வந்துவிட்டது. அந்த அளவிற்கு மருத்துவமனை தரம் இல்லாமல் இருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சரை வரவைத்து விரைவில் சரிசெய்யப்படும். சென்னை முதல் பெங்களூர் வரை ரூ.10 ஆயிரம் கோடியில் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான நில ஆர்ஜித பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
பொன்னை பகுதியில் விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
image
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,
துரைமுருகன் சட்டமன்றத்தில் ஒன்று பேசுகிறார் அறிக்கையில் ஒன்று சொல்கிறார். துரைமுருகன் இரட்டை வேடம் போடுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளாரே?
பாவம் நானாவது இரட்டை வேடம் போட்டிருக்கிறேன். அவர் பல வேடம் போட்டிருக்கிறார். கலங்கி போய் அவர் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆந்திரா அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டாமல் இருக்க தமிழக அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. ஆந்திரா அரசு அணை கட்ட முயற்சித்தால் வழக்கை துரிதப்படுத்துவோம்.
தமிழகத்தில் மதகுகள் சீர் செய்யப்படாததால் தண்ணீர் வீணாகிறதே?
10 ஆண்டுகளாக மதகுகள் சரி செய்யப்படாததால் தான் கிருஷ்ணகிரியில் ஒரு மதகு உடைந்து தண்ணீர் வீணாகியது, பரம்பி குளத்தில் தண்ணீர் வீணாகியது. ஆனால் தற்போது அனைத்து அணைகளிலும் மதகுகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம்.
திமுக அரசு பயங்கரவாதத்திற்கு துணை போகிறது. இதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என இந்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் குற்றம்சாட்டியுள்ளாரே?
யாரோ அவர் விவரம் தெரியாத மந்திரி நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை எங்கள் கொள்கையும் அதுவல்ல என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.