தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது என்று அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மிகவும் குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட நானே வருவேன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இரட்டையர்களாக தனுஷ் ஒரு கதாபாத்திரத்தில் நல்லவராகவும், ஒருவர் சைக்கோபாத் ஆகவும் காட்டப்படுகிறார், அதில் ஒரு தனுஷ் சிறு வயதில் தனது தந்தையை கொன்று விடுகிறார். இதனால் அவரது அம்மா அவரை தனியாக விட்டு விட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார், பிறகு இருபது ஆண்டுகள் கழித்து மற்றொரு தனுஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று அவரது குழந்தைக்கு மனநோய் பாதிக்கப்படுகிறது, இறுதியில் என்ன ஆனது என்பதே நானே வருவேன் படத்தின் கதை.
பொதுவாக தனுஷின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டியது இல்லை, தேசிய விருது வென்றதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பதை இந்த படத்திலும் மீண்டும் தனது நடிப்பின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். கொடி படத்திற்கு பிறகு இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன். பிரபு மற்றும் கதிர் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வேறுபாடு காட்டி சிறப்பாக நடத்தி உள்ளார். தனுசை தாண்டி இந்த படத்தில் நடிப்பதற்கு வேறு யாருக்கும் ஸ்கோப் இல்லை. தனி ஆளாக முழு படத்தையும் தாங்கி பிடிக்கிறார் தனுஷ். மேலும் இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்றாலும் இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது. முதல் பாதி முடியும் போது வரும் டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காத விதமாக அமைந்திருந்தது. கிளைமாக்ஸ்சும் அதே போல இதுவரை செல்வராகவன் படங்களில் இல்லாதது போல் புதிதாக இருந்தது. படம் ஆரம்பித்து செல்ல செல்ல இது ஏதோ ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்று மனதிற்கு வந்தாலும், அதனை யோசிக்க விடாமல் திரைக்கதையில் மற்றும் காட்சி அமைப்புகளில் செல்வராகவும் நம்மை கொண்டு செல்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு சில பாடல்கள் மற்றும் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், பின்னணி இசையில் வழக்கம் போல கலக்கி இருக்கிறார், டெக்னிக்கலாகவும் படம் மிகவும் நன்றாக உள்ளது.
யோகி பாபுவின் ஒன் லைன் காமெடி இந்த படத்தில் நன்றாக இருந்தது. இவரது போர்சன் தவிர, படம் வேறு எங்கும் சிதறாமல் கதைக்குள் மட்டுமே செல்கிறது. இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் நானே வருவேன் படத்தில் பல லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் பெரிதாக குறை சொல்லும் அளவிற்கு இல்லாதது இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி.