இரட்டையர்களில் ஒருவர் நல்லவர் ஒருவர் கெட்டவர். கெட்டவர் செய்த அநீதிகளுக்கு, நல்லவர் செய்ய நினைக்கும் எதிர்வினையே இந்த `நானே வருவேன்’.
கதிரும் பிரபுவும் இரட்டையர்கள். சிறுவயதிலிருந்தே அண்ணன் கதிர் தீய செயல்களில் ஈடுபட, அவரை மரத்தில் கட்டிவைத்து தண்டனை தருகிறார் அவனின் தந்தை. அப்போது அவனுக்கு நடக்கும் சில நிகழ்வுகள் அவனை மேலும் மோசமானவனாக மாற்றுகின்றன. இருபது ஆண்டுகள் கழித்து பிரபு அவன் குடும்பம், குழந்தை என நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறான். ஆனாலும், விதி அவனை விட்டபாடில்லை. பிரபுவின் மகளை அமானுஷ்யங்கள் துரத்துகின்றன. மனநல மருத்துவர், பேய் ஓட்டுபவர்கள் எனப் பலரைக் கலந்து ஆலோசித்ததில், பேய் சொல்வதைச் செய்வதே சிறந்தது என ஆலோசனை வழங்குகிறார்கள். அது என்ன யோசனை, எந்த அமானுஷ்யம் கதிரின் மகளைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகிறது, அதற்கும் அண்ணன் கதிருக்கும் என்ன சம்பந்தம் என்பதையெல்லாம் இரண்டு மணி நேர ஹாரர்/திரில்லர் சினிமாவாக எடுத்திருக்கிறார் செல்வராகவன்.
கதிர், பிரபு என இருவேறு வேடங்களில் தனுஷ். குடும்பமே கண்ணாக, எதிர்த்து நிற்கும் பலமே இல்லாத பயந்த சுபாவம் கொண்ட மனிதராய் பிரபு; தன் வாழ்க்கையிலிருந்த எல்லாவற்றையுமே இழந்துவிட்டாலும், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் ஏதோவொன்றை ஒளித்துவைத்துக்கொண்டு இயல்பாய் வாழ்வதாய் நடித்துக்கொண்டிருக்கும் கதிர் என இரு துருவங்களான கேரக்டர்களுக்குக் கச்சிதமாய் உயிர்கொடுத்து வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். ஏதோ தவறு நடந்துவிட்டதென எண்ணி, சட்டெனக் கண்களை மட்டும் காட்டி இயல்பாய் கதிர் சிரிக்கும் காட்சி தனுஷின் தேர்ந்த நடிப்பிற்குச் சாட்சி.
படத்தில் வரும் மற்ற நடிகர்களுக்கு இடையே தனித்துத் தெரிபவர் தனுஷின் மகளாய் நடித்திருக்கும் ஹியா டேவி. அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சுவது, அதன்பின்னான மேனரிசம் என நல்லதொரு நடிப்பு. பிரபு, இந்துஜா, யோகி பாபு, சரவண சுப்பையா, சூப்பர் சிங்கர் ஆஜித் என நிறைய வேடங்களில் பல தெரிந்த முகங்கள். ஆனாலும் யாருக்கும் பெரிய அளவில் எந்தவொரு ஸ்கோப்பும் திரைக்கதையில் இல்லை. செல்வராகவனும் ஒரு கேமியோ காட்சியில் வருகிறார். ஹாரர் படத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் துருத்திக்கொண்டிருக்கிறது யோகி பாபுவின் காமெடி ஒன்லைனர்கள். மனநல மருத்துவராக வரும் பிரபுவையே பாசிட்டிவ் வைப்ஸ், நெகட்டிவ் வைப்ஸ் எனப் பேய்க் கதை பேச வைத்திருப்பது நெருடல்.
யுவனின் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலம். கதிர் கதாபாத்திர தீம் மியூசிக்கான ‘வீரா சூரா’ திரையரங்கம் முழுக்க நிரம்பி அதிரச் செய்கிறது. படத்தைப் பெருமளவு காப்பாற்றியிருப்பதே யுவனின் பின்னணி இசைதான். காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் அந்த மொட்டை மாடி ஷாட்டில் கவனிக்க வைக்கிறது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு.
பழக்கப்பட்ட கதையான இரட்டையர்கள், ஹாரர், அமானுஷ்யம் என்பதையெல்லாம் கடந்தும் முதல் பாதி நிமிர்ந்து உட்காரவே வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கதை சுத்தமாய் எடுபடவேயில்லை. பிளாஷ்பேக்கே பெருமளவு நேரத்தை எடுத்துக்கொள்ள ‘டேவிட் வெர்சஸ் கோலியாத்’ சண்டை எந்தவித உப்புசப்புமின்றி வெறும் சம்பிரதாயமாகவே முடிந்துவிடுகிறது. ‘நீயே பொழச்சுட்டே’ மாதிரியான வசனங்களில் மட்டும் செல்வா டச். ‘நானே வருவேன்’ ஆனால் எப்போ செல்வா என்று மட்டுமே கேட்கத் தோன்றுகிறது. சிறப்பான ஸ்டேஜிங்குடன் ஆரம்பிக்கப்பட்ட படத்தை, பழகிப்போன கதைக்களத்தில் படு க்ளிஷேவாக முடித்துவைத்திருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் சுவாரஸ்யமாய் இருந்திருந்தால் `நிச்சயம் வந்துவிட்டான்’ என்று மார்தட்டிச் சொல்லியிருக்கலாம்.