நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மூதாட்டியை காப்பாற்றி பாதுகாப்புடன் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-ஈரோடு செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் மீது நின்று தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மற்றொரு முயற்சி நடைபெற்றுள்ளது.
பள்ளிபாளையம் பேருந்து நிலைய பகுதியில் யாசகம் எடுத்து வந்த ஓமலூர் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள், உடலில் உள்ள நோய் தொற்றால் அவதிப்பட்டு வந்தார். அவர், வயிற்று வலி தாங்க முடியாமல் பாலத்தின் மீதிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதையடுத்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதற்கிடையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் மீனவர்களின் பரிசல் உதவியுடன் மூதாட்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் படகில் இருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து பள்ளிபாளையம் பகுதியில் மூதாட்டி ராஜம்மாளின் தற்கொலை முயற்சிக்கு காரணம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM