கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திருநங்கைகளும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை குறித்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசியில் தானே பேருந்தில் போறீங்க என்றும் மற்ற இலவச திட்டத்தையும் குறித்து ஏளனமாக பேசினார். இது பயனாளிகளுக்கு மட்டுமல்லாமல் வெகுஜன மக்களை வேதனையடை செய்தது.
இலவசம் என்பதை பெருமையாக வழங்கி வரும் அரசு தனது பயனாளிகளை பார்த்து ஓசி தானே என கேட்பதை போல அமைச்சரின் பேச்சு இருந்தது. வெளிப்படையாகவே அமைச்சர் இப்படி பேசுகிறார் என்றால் எளிய மக்களை குறித்து கட்சிக்குள் என்னவெல்லாம் பேசுவார் என்ற கருத்துக்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பாட்டி துளசியம்மாள் என்பவர் இன்று மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறி ” நா ஓசியில் பயணிக்க மாட்டேன்.. டிக்கெட் கொடு என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலானது.
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த பாட்டி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் கட்சிகள், அந்த திட்டத்தை வைத்தே மக்களை ஏளனமாக பேசினால் விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கு பாட்டியின் வீடியோ சரியான உதாரணம். மக்களின் சுயமரியாதையை சீண்டினால் இலவசங்களுக்கு எதிராக புரட்சி வெடிக்க தொடங்கும் என்றும் அதற்கான பிள்ளையார்சுழியை துளசியாமால் பாட்டி போட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், சுயமரியாதையோடு இருப்பது வரவேற்கதக்கது. இதே சுயமரியாதையை அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு காசு கொடுக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்தலில் செய்வதாக அறிவித்தவைகளை செய்யாமல் ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் ஒரு சில இலவசங்களை வழங்கி மக்களை திசை திருப்பிவிட்டு தேர்தலை சந்திக்கும் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும். அதை சரி செய்யவே ஓட்டுக்கு காசு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மக்கள் பலர் போட்டிபோட்டுக்கொண்டு ஓட்டுக்கு பணம் பெறுவதை சாமர்த்தியம் என எண்ணுகின்றனர். மக்கள் அந்த மனநிலையில் இருந்து மாறுவார்களா? ஓசி-டிக்கெட்டுக்கு எதிராக நடந்த பாட்டியின் புரட்சி தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது.